Published : 12 Oct 2019 06:26 PM
Last Updated : 12 Oct 2019 06:26 PM

அஸ்வின் 4 விக்கெட்: மஹராஜ், பிலாண்டர் போராட்டம்- இந்தியா 326 ரன்கள் முன்னிலை- பாலோ ஆன் கொடுப்பார்களா?

புனே டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 200 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகாமல் காப்பாற்றிய விதத்தில் பவுலர் மஹராஜின் அரைசதம், பிலாண்டரின் 44 நாட் அவுட், இருவரும் சேர்ந்து அமைத்த 109 ரன்காள் கூட்டணி பெரும் பங்களிப்புச் செய்தது.

கடைசியில் தென் ஆப்பிரிக்கா அணி 275 ரன்களுக்கு அனைது விக்கெட்டுகளையும் இழக்க இந்திய அணி 326 ரன்கள் என்ற பெரிய முன்னிலைப் பெற்றுள்ளது. பாலோ ஆன் கொடுக்கப்படுமா அல்லது இந்திய அணி மீண்டும் பேட் செய்யுமா என்பது நாளைதான் தெரியவரும், இப்போதெல்லாம் பாலோ ஆன் கொடுப்பது ஃபேஷன் அல்ல. என்பதால் இந்திய அணியே பேட் செய்ய வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை பவுலர்களுக்கு போதிய ஓய்வு கிடைத்து விட்டது, பாலோ ஆன் கொடுப்போம் என்று முடிவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, பிட்ச் உடைந்து விட்டது எனவே பிரச்சினையில்லை, பாலோ ஆன் கொடுத்தாலும் இந்திய அணி விரைவில் வெற்றியை ஈட்டி விடும்.

இன்று காலை மீண்டும் இந்திய வேகப்பந்து வீச்சு அபாரமாக அமைந்தது, ஷமி, உமேஷ் யாதவ் அற்புதமாக ஸ்விங் செய்து பந்தை கொஞ்சம் கூடுதலாக எழும்பவும் செய்தனர். 36/3 என்று தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி இரவுக்காவலன் ஆன்ரிச் நோத்திய (நார்ஜே அல்ல) 3 ரன்களில் ஷமியின் அபாரமான ஷார்ட் பிட்ச் எகிறு பந்தில் 4வது ஸ்லிப்பில் கோலியின் அருமையான கேட்சுக்கு வெளியேறினார், இவர் கிரீசுக்கு நன்றாக வெளியே நின்று ஆடியதால் எகிறு பந்து பலனளித்தது.

டிபுருய்ன் 30 ரன்களில் 6 பவுண்டரிகளுடன் நன்றாக ஆடி வந்தார், ஆனால் உமேஷ் யாதவ்வின் லைன் மற்றும் லெந்த் அவரை கிரீசுக்குள் முடக்க ஒரு பந்தை அவர் கவர் திசையில் ‘பஞ்ச்’ செய்ய முயன்ற போது எட்ஜ் ஆகி சஹாவின் டைவிங் கேட்சுக்கு வெளியேற தென் ஆப்பிரிக்கா 53/5 என்று ஆனது.

அதன் பிறகு ஃபாப் டுபிளெசி மற்றும் டி காக் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 75 ரன்களைச் சேர்த்தனர். இருவரில் டுபிளெசி அதிக சிரமமின்றி ஆடினார், சில நல்ல ஷாட்களையும் அவர் ஆஃப் திசையில் அடித்தார். டி காக் 31 ரன்களை 48 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். மிடில் அண்ட் லெக்கில் பிட்ச் ஆகி சற்றே திரும்ப கால்களை நகர்த்தாத டி காக்கின் மட்டையைக் கடந்து பைல்களைத் தொந்தரவு செய்தது. 128/6.

டுப்ளெசி 117 பந்துகள் நின்று 9 பவுண்டரிகள் 1 சிக்சர் மூலம் 64 ரன்கள் என்று தொடரின் 2வது அரைசதத்தை எடுத்து சவுகரியமாகவே ஆடிவந்த நிலையில் அஸ்வின் பந்து ஒன்று நின்று நேராகச் சென்றதில் டுபிளெசி மட்டையால் இடிக்க ரஹானேவிடம் கேட்ச் ஆனது. இடையில் சேனூரான் முத்துசாமி 7 ரன்களில் ஜடேஜாவின் பந்தை ஆடாமல் கால்காப்பில் வாங்கி எல்.பி.ஆனார், பந்து வெளியே பிட்ச் ஆனாலும் பந்தை ஆடாமல் கால்காப்பில் வாங்கியதால் வெளியேறினார் தென் ஆப்பிரிக்கா 162/8 என்று ஆனது.

பிலாண்டர், மகராஜ் சதக்கூட்டணி:

மஹராஜ், பிலாண்டர் கூட்டணியில் பிலாண்டர் 22 பந்துகள் கழித்துதான் தன் முதல் ரன்னை எடுத்தார். பந்தும் மென்மையானதால் எளிதில் ஆட முடிந்தது, ஆனால் சூழ்நிலை கடினமான அழுத்தம் தரும் சூழ்நிலை என்பதால் மஹராஜ் காயத்துடன் ஆடி அரைசதம் எடுத்தது உண்மையில் அபாரமான ஒரு தடுப்பு போராட்டமாகும்.

12 பவுண்டரிகளுடன் 132 பந்துகளில் 72 ரன்களை மஹராஜ் எடுக்க பிலாண்டர் 192 பந்துகள் நின்று 44 ரன்களில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் சேர்ந்து 259 பந்துகளில் 9வது விக்கெட்டுக்காக 109 ரன்களைச் சேர்த்து 2001 புகழ்பெற்ற கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் வாஹ்-கில்லஸ்பி கூட்டணி 9வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 133 ரன்கள் சாதனையை அச்சுறுத்தினர்.

மஹராஜ் 44 ரன்களில் இருந்த போது அஸ்வின் பந்து வீச்சில் அவரிடமே கொடுத்த கேட்சை அஸ்வின் தவற விட்டார், இதுதவிர மஹராஜ் இன்னிங்ஸ் அபாரமானதே. 72 ரன்களில் அஸ்வினின் லெக் திசை பந்தை பிளிக் செய்ய முயன்று ரோஹித் சர்மாவிடம் லெக் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேற, ரபாடாவை அஸ்வின் எல்.பி.செய்ய தென் ஆப்பிரிக்க அணி 106வது ஓவரில் 275 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது, அத்துடன் 3ம் நாள் ஆட்டமும் முடிந்தது. அஸ்வின் 28.4 ஒவர்கள் 9 மெய்டன் 69 ரன்கள் 4 விக்கெட்டுகள் என்று அதிக விக்கெட்டுகளில் முடித்தார். ஆனால் கோலி அனாவசியமாக அதிகம் நம்பிய ஜடேஜா 36 ஓவர்கள் வீசி 81 ரன்களுக்கு 1 விக்கெட்டையே கைப்பற்றினார், இஷாந்த் சர்மா அவ்வப்போது வீசி சில அருமையான பந்துகளை காட்டினார்.

உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஷமி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

-நோபாலன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x