Published : 12 Oct 2019 05:22 PM
Last Updated : 12 Oct 2019 05:22 PM

உலகிலேயே முதல் முறை: முழு மாரத்தான் போட்டியில் புதிய சாதனை படைத்த கென்ய தடகள வீரர் 

கென்ய தடகள வீரர் எலுட் கிப்சோகே

வியன்னா

முழு மாரத்தான் தொலைவை 2 மணிநேரத்துக்குள் கடந்து உலகிலேயே முதல் வீரர் எனும் புதிய சாதனையை கென்யாவைச் சேர்ந்த தடகள வீரர் எலுட் கிப்சோகே படைத்துள்ளார்.

முழு மாரத்தான் ஓட்டத்தின் தொலைவு 42.2 கி.மீ. இந்தத் தொலைவை ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் 40 வினாடிகளில் எலுட் கிப்சோகே கடந்துள்ளார். ஆனால், இந்த மாரத்தான் ஓட்டம் அதிகாரபூர்வமானது அல்ல என்பதால், இது சர்வதேச சாதனைப் பட்டியலில் சேராது என்பது குறிப்பிடத்தக்கது

கென்ய வீரர் கிப்சோகேவுக்குத் துணையாக 42 வீரர்கள் உடன் காரிலும், பைக்கிலும் வந்தார்கள். இதில் 1500 மீட்டர் ஒலிம்பிக் சாம்பியன் மாத்யூ சென்ட்ரோவிட்ஸ், ஒலிம்பிக்கில் 5 ஆயிரம் மீட்டரில் வெள்ளி வென்றவரான பால் செலிமோ உள்ளிட்ட பலர் துணையாகச் சென்றனர்.

கென்ய வீரர் கிப்சோகே எங்கெல்லாம் சோர்வடைந்தாரோ அங்கு உடனடியாக தண்ணீர், குளுக்கோஸ், சத்துபானம், ஆகியவற்றைக் கொடுத்து அவரைச் சோர்வடையவிடாமல் ஓடவைத்தனர். ஆனால், உண்மையான மாரத்தான் போட்டியில் இவ்வாறு செய்தல் கூடாது. சாலையில் ஓடும்போது பக்கவாட்டில் ஆங்காங்கே மேஜையில் குடிநீர் பாட்டில்கள், சத்துபானங்கள் இருக்கும். அதை வீரர்களே எடுத்துக் குடிக்க வேண்டும் என்பதுதான் முறை.

இந்த மாரத்தான் போட்டியில், ஒரு கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க கிப்சோகே சராசரியாக 2.50 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். 21 கிலோமீட்டர் தொலைவை 59.35 வினாடிகளில் கடந்தார்.

ஆனால், 2 மணிநேரத்துக்குள்ளாக முழு மாரத்தான் தொலைவையும் கடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆனாலும், வினாடிகள் அடிப்படையில் 2.48 நொடிகள் முதல் 2.52 நொடிகள் வரை கிப்சோகே 2 மணிநேரத்துக்குள் வருவதில் தாமதம் இருந்தது.

ஆனால் 2-ம் பகுதியில் ஓடும்போது கிப்சோகே ரசிகர்களின் ஆரவாரம், ஆதரவுக் குரல்கள் ஆகியவற்றால் உற்சாகமடைந்தார். இதனால், முழுமையான மாரத்தான் தொலைவை ஒரு மணிநேரம் 59 நிமிடங்கள் 40 வினாடிகளில் எலுட் கிப்சோகே கடந்தார்.

இந்த மாரத்தான் ஓட்டத்தை இங்கிலாந்தின் ரசாயன நிறுவனமான ஐஎன்இஓஎஸ் நடத்தியது. இதற்கு முன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் முழு மாரத்தான் தொலைவை 2 மணிநேரத்துக்குள் முடிக்க கப்சோகே முயன்று தோல்வி அடைந்தார். ஆனால், 2-வது முயற்சியில் வெற்றி பெற்றார்.

ஆனால், 2018-ம் ஆண்டு நடந்த பெர்லின் தடகளப் போட்டியில் கிப்சோகேயின் மாரத்தான் சாதனை ஓட்ட நேரம் என்பது 2 மணிநேரம், ஒரு நிமிடம் 39 வினாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x