உலக சாம்பியன் குத்துச்சண்டை: வெண்கலத்துடன் விடைபெற்றார் மேரி கோம்: சர்ச்சையில் முடிந்த ஆட்டம்?
உலான் உடே
ரஷ்யாவில் நடந்துவரும் மகளிருக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் 51 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்கத்தோடு விடை பெற்றார்.
நடுவரின் தவறான முடிவுக்கு மேரி கோம் எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்தபோதிலும் அது நிராகரிக்கப்பட்டது. அரையிறுதியில் தர வரிசையில் 2-ம் இடத்தில் உள்ள துருக்கி வீராங்கனை புசேனாஸ் காகிரோக்லுவிடம் 1-4 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வி அடைந்தார்.
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 6 முறை தங்கப்பதக்கம் வென்ற மேரி கோம் இந்த முறை வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியுள்ளார்.
ரஷ்யாவின் உலான் உடே நகரில் மகளிருக்கான உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி நடந்து வருகிறது. 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற எம்.சி.மேரி கோம் 51 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்றார்.
51 கிலோ எடைப்பிரிவுக்கு இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை மேரி கோமை எதிர்த்து, துருக்கி வீரங்கனை புசேனாஸ் காகிரோக்லு மோதினார். 5 சுற்றுகளின் முடிவில் மேரி கோம் 1-4 என்ற கணக்கில் துருக்கி வீராங்கனை புசேனாஸிடம் தோல்வி அடைந்தார்.
தொடக்கத்தில் இருந்தே மேரி கோம், துருக்கி வீராங்கனை புசேனாஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இதில் துருக்கி வீராங்கனை புசேனாஸின் முகத்தில் மேரி கோம் தாக்கியதற்கு நடுவர் புள்ளியை அளிக்கவில்லை. இதனால் எதிர்ப்பு தெரிவித்தார் மேரிகோம்.
ஆனால் அடுத்தடுத்து வந்த சுற்றுகளிலும் மேரி கோமுக்கு ஈடுகொடுத்து மோதி துருக்கி வீராங்கனை காகிரோக்லு திணறவிட்டார். இதற்குப் பதிலடியாக மேரி கோம் சில பஞ்ச்கள் கொடுத்தபோதிலும் அவருக்குப் புள்ளி வழங்கவில்லை.
இதனால் 4-1 என்ற கணக்கில் மேரி கோம் தோல்வி அடைந்ததாக நடுவர் அறிவித்தார். ஆனால், நடுவரின் முடிவை ஏற்காத மேரி கோம், மேல்முறையீடு செய்தார். ஆனால், மேரி கோமின் மேல்முறையீட்டை சர்வதேச குத்துச்சண்டை அமைப்பின் தொழில்நுட்பக் குழு நிராகரித்தது. இதனால் வெண்கலப் பதக்கத்தோடு மேரி கோம் விடைபெற்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேரி கோம் வேதனையுடன் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார் அதில், " இந்தப் போட்டியின் முடிவு எப்படி சரியானது, எப்படி தவறானது, ஏன் சரியான முடிவு, ஏன் தவறான முடிவு என்பதை இந்த உலகம் அறிந்துகொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
51 கிலோ எடைப் பிரிவில் மேரி கோம் பெறும் முதலாவது வெண்கலப்பதக்கம் இதுவாகும்.
பிடிஐ
