Published : 11 Oct 2019 09:14 PM
Last Updated : 11 Oct 2019 09:14 PM

கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்த விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புனேயில் இன்று இரட்டைச் சதம் அடித்து 336 பந்துகளில் 33 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 75.59 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தன் இன்னிங்ஸை அதிவேகமாக ஆடி அடித்து நொறுக்கி 254 ரன்களைக் குவித்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். இந்திய அணி 601/5 என்று டிக்ளேர் செய்தது.

2ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி மார்க்ரம், டீன் எல்கர், தெம்பா பவுமா விக்கெட்டுகளை இழந்து 36/3 என்று தட்டுத்தடுமாறி வருகிறது, உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் ஷமி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்சில் விராட் கோலி பல சாதனைகளை உடைத்தார், 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார், ஸ்மித், பிராட்மேன் சாதனைகளை உடைத்தார். பிராட்மேன் 150+ ஸ்கோர்களை 8 முறை எடுக்க, விராட் கோலி 9 முறை எடுத்து அவரைக் கடந்தார். அதே போல் பிராட்மென் எடுத்த டெஸ்ட் மொத்த ரன்களையும் கடந்தார்.

இலங்கைக்கு எதிராக 2017-ல் எடுத்த தனது அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரான 243 ரன்களைக் கடந்து 254 என்று உயர்த்தினார். 250 ரன்களுக்கும் மேல் குவித்த இந்திய பேட்ஸ்மென்களில் 5வது இடம்பிடித்துள்ளார். 250+ ஸ்கோரை எடுத்த முதல் கேப்டனுமாவார் விராட் கோலி.

இவர் தனது 7வது டெஸ்ட் இரட்டைச் சதத்தை எடுத்தார். இதன் மூலம் அதிக இரட்டைச் சத இந்திய வீரர் ஆனார். இதற்கு முன்னர் 32 இந்திய டெஸ்ட் கேப்டன்கள் சேர்ந்தே 4 இரட்டைச் சதங்களையே எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியா நீங்கலாக தான் விளையாடிய அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் இரட்டைச் சதம் எடுத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல் இரட்டைச் சதம் எடுத்த முதல் இந்திய கேப்டன் ஆனார் விராட் கோலி, இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் கேப்டனாகச் சென்ற பொது தென் ஆப்பிரிக்காவில் அடித்த 169 ரன்களே இந்திய கேப்டனாக அதிகபட்ச ஸ்கோராகும்.

138 இன்னிங்ஸ்களில் 7000 ரன்கள் எடுத்துள்ளார், சச்சின் 136 இன்னிங்ஸ்களிலும் சேவாக் 134 இன்னிங்ஸ்களிலும் 7000 ரன்களை எட்டியுள்ளனர்.

40 டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 7 இரட்டைச் சதங்களை எடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x