Published : 11 Oct 2019 04:38 PM
Last Updated : 11 Oct 2019 04:38 PM

முச்சத வாய்ப்பிருந்தும் டிக்ளேர் செய்த கோலி: தென் ஆப்பிரிக்க ‘ஸ்பிரிட்டை’ உடைத்து நொறுக்கிய ஜடேஜா-கோலி அதிரடி ஆட்டம்

புனே,

புனே டெஸ்ட் போட்டியில் தன் டெஸ்ட் அதிகபட்ச ரன்களான 254 ரன்களுடன் நாட் அவுட் என்று இந்திய இன்னிங்சை 601/5 என்ற நிலையில் விராட் கோலி டிக்ளேர் செய்தார்.

விராட் கோலி 336 பந்துகளில் 33 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 75.59 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் தன் இன்னிங்ஸை அதிவேகமாக ஆடி அடித்து நொறுக்கினார்.

ஜடேஜா 91 ரன்கள் எடுத்து முத்துசாமி பந்தில் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தவுடன் கோலியும் சேர்ந்து அவருடன் பெவிலியன் திரும்பினார்.

இன்று விழுந்த 2 விக்கெட்டுகளில் ஒன்று ரஹானே அவர் மஹராஜின் 100வது டெஸ்ட் விக்கெட்டாக 59 ரன்களில் வெளியேறினார், கோலி, ரஹானே ஜோடி 178 ரன்களை 4வது விக்கெட்டுக்காகச் சேர்த்துப் பிரிந்தது. அதன் பிறகு கோலி, ஜடேஜா ஜோடி இணைந்தனர். இருவரும் சேர்ந்து 39 ஓவர்களில் 225 ரன்களை அதிவேகமாகக் குவித்தனர், ஒரு கட்டத்தில் இந்த கூட்டணி 12 ஓவர்களில் 100க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து அதிரடியாக ஆடி தென் ஆப்பிரிக்காவின் ஸ்பிரிட்டை உடைத்து நொறுக்கினர்.

மஹராஜ் பாவம் 50 ஓவர்களை வீசி 196 ரன்களை விட்டுக் கொடுத்தார், பவுலிங்கில் இரட்டைச் சதம் அடிக்கும் முன் காயமடைந்து பெவிலியன் திரும்பினார். டுபிளெசிஸ் மஹராஜை மிக அதிகமாகப் பயன்படுத்தி அவரது காயத்துக்குக் காரணமானதாக மோசமான கேப்டன்சி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

களைப்படைந்த தென் ஆப்பிரிக்க அணியை புரட்டி எடுத்த ஜடேஜா -கோலி அதிரடி இரட்டைச் சத கூட்டணி;

விராட் கோலியின் அபார ஆட்டங்கள் ஒரு புறம் இருந்தாலும் அதிர்ஷ்டம் இவர் பக்கம் இருந்தது, சதம் அடித்த பிறகு ரபாடா பந்தில் பிளம்ப் ஆக எல்.பி.ஆனார். உள்ளே வந்த பந்து அவரது மட்டையையும் முன் கால்காப்பையும் கடந்து பின் கால்காப்பு மேல் பகுதியில் அடித்தது, ஆனால் அதனை பந்து ஸ்டம்புக்கு உயரமாகச் சென்றிருக்கக் கூடும் என்ற ஐயத்தில் நடுவர் அவுட் கொடுக்கவில்லை, ஆனால் அது ஆஃப் அண்ட் மிடில் ஸ்டம்பை பதம் பார்த்ததாக ரீப்ளே கூறியது.

டுபிளெசிஸ் அதனை ரிவியூ செய்யாமல் விட்டார், காரணம் அம்பயர்ஸ் கால் என்று வரும் என்பது அவர்களுக்குத் தெரியும், ஒரு அணியை அழைத்து குழிப்பிட்ச்களையும் தயாரித்து நடுவரும் விளையாடினால் என்ன செய்ய முடியும்? நேற்று மயங்க் அகர்வால் பிலாந்தர் பந்தில் பிளம்ப் எல்.பி. கொடுக்கவில்லை ரிவியூவும் பயனளிக்கவில்லை. ஐசிசி பிட்ச் மற்றும் நடுவர்களின் தரங்களை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

150 ரன்களை எடுத்த போது விராட் கோலி மட்டை விளிம்பில் பட்டு கேட்சாக சென்றது, கொஞ்சம் கடினமான வாய்ப்புதான் ஆனால் டுபிளெசிஸ் பிடித்திருக்க வேண்டும் ஆனால் பிடிக்கவில்லை, காரணம் தென் ஆப்பிரிக்க அணியே பயங்கரவெயிலில் களைப்படைந்து விட்டிருந்தனர். அடுத்து கோலி 208 ரன்களில் இருந்த போது கோலி முத்துசாமி பந்தில் ஆட்டமிழந்தார் ஆனால் அது நோ-பால். ஆகவே விராட் கோலிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் இந்த இன்னிங்ஸ் சாத்தியமில்லை என்று தெரிகிறது.

145வது ஓவரில் ஜடேஜா 70 பந்துகளில் 32 ரன்கள் என்று இருந்தார், விராட் கோலி தன் 7வது இரட்டைச் சதம் அடித்து 29 பந்துகளில் 202 ரன்கள் எடுத்து ஆடிவந்தனர். இந்திய அணி 488/4 என்று இருந்தது.

அதன் பிறகு முத்துசாமியின் ஒரு ஓவரில் 14 ரன்கள். மார்க்ரம் ஓவரில் 13 ரன்கள் மீண்டும் முத்துசாமி ஓவரில் 11 ரன்கள். 150வது ஓவரை வீசிய மஹராஜை ஜடேஜா ஒரு சிக்ஸ் அடிக்க விராட் கோலி ஒரு சிக்ஸ் 2 பவுண்டரிகளை வெளுக்க 21 ரன்கள் அந்த ஓவரில் விளாசப்பட்டது. மீண்டும் முத்துசாமி ஓவரில் 13 ரன்கள். 156.3 ஓவர்களில் ஸ்கோர் 601 ரன்களாக அதிகரித்தது, அதாவது 11 ஓவரக்ளில் 113 ரன்களை கோலி, ஜடேஜா விளாச தென் ஆப்பிரிக்க அணி நிலைகுலைந்தது. அப்போது டுபிளெசிஸ் நிம்மதிக்காக ஜடேஜா 91 ரன்களில் ஆட்டமிழக்க விராட் கோலி 254 ரன்கள் நாட் அவுட் என்று முச்சத வாய்ப்பிருந்தும் டிக்ளேர் செய்து தன் சொந்த சாதனை முக்கியமல்ல என்பதை நிரூபித்தார்.

தென் ஆப்பிரிக்க அணி மார்க்ரம் (0), டீன் எல்கர் (6) ஆகியோர் விக்கெட்டை உமேஷ் யாதவிடம் இழந்து 33/2 என்று தடுமாறி வருகிறது. இன்னும் ஸ்பின் வரவில்லை. மிகப்பெரிய உதையை நோக்கி தென் ஆப்பிரிக்கா என்றே கூற வேண்டும்.

- நோபாலன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x