Published : 11 Oct 2019 02:54 PM
Last Updated : 11 Oct 2019 02:54 PM

சாதனை மன்னன் விராட் கோலி 7வது இரட்டைச் சதம்: டான் பிராட்மேனின் இரு சாதனைகள் முறியடிப்பு- 7,000 ரன்கள் குவிப்பு

இந்திய கேப்டன் விராட் கோலி இன்னொரு சாதனையைச் செய்துள்ளார், கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன் என்று கருதப்படும் டான் பிராட்மேன் எடுத்த 6,996 டெஸ்ட் ரன்களைக் கடந்துள்ளார் விராட் கோலி. மேலும் புனே டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் கண்டார் அவர்.

இது விராட் கோலியின் 7வது இரட்டைச் சதமாகும். தென் ஆப்பிரிக்க ஸ்பின்னர் முத்துசாமி வீசிய பந்தை ஸ்கொயர் லெக் திசையில் தட்டி விட்டு 2 ரன்கள் எடுத்த போது அவர் 200 ரன்களை எட்டினார்.

மஹராஜ் பந்தை தட்டி விட்டு 1 ரன் எடுத்ததன் மூலம் விராட் கோலி டான் பிராட்மேனின் டெஸ்ட் ரன்களைக் கடந்தார். மேலும் 150 ரன்களுக்கும் அதிகமாக எடுத்ததில் 9 முறை விராட் கோலி மைல்கல்லை எட்டி டான் பிராட்மேனின் 8 என்ற எண்ணிக்கையைக் கடந்தார்.

297 பந்துகளில் 28 பவுண்டரிகளுடன் விராட் கோலி தனது 7வது டெஸ்ட் இரட்ட்டைச் சதத்தை எடுத்து முடித்தார். அவருடன் ஜடேஜா 32 ரன்களில் ஆட இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 488 ரன்கள் எடுத்துள்ளது.

ஏற்கெனவே தென் ஆப்பிரிக்க இடது கை பேட்ஸ்மென்கள் ஆட முடியாவண்ணம் அஸ்வினுக்குச் சாதகமாக சில குழிகளும், ஜடேஜாவுக்கு சாதகமாகக் குழிகளும் உருவாகியுள்ளன. எனவே தென் ஆப்பிரிக்கா பாடு படு கஷ்டம்தான், இந்த டெஸ்ட் போட்டியை 4 நாட்கள் கடந்து கொண்டு சென்றால் அது தென் ஆப்பிரிக்க அணியின் சாதனையாகக் கருத இடமுண்டு.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7,000 ரன்கள் மைல்கல்லைக் கடந்தார் விராட் கோலி. ஆனால் சேவாக், சச்சின் ஆகியோர் விராட் கோலியை விட விரைவாக 7000 ரன்களை வந்தடைந்துள்ளனர்.

வால்டர் ஹேமண்ட் 131 இன்னிங்ஸ்களிலும் சேவாக் 134 இன்னிங்ஸ்களிலும் டெண்டுல்கர் 136 இன்னிங்ஸ்களிலும் விராட் கோலி 138 இன்னிங்ஸ்களிலும் 7000 ரன்கள் மைல்கல்லை எட்டியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x