

புனே
புனேவில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
நண்பகல் உணவு இடைவேளை வரை இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 104 ரன்களுடனும், ரஹானே 58 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். இருவரின் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளது.
பிலாண்டர் வீசிய பந்தில் அருமையான ஸ்டைர்ட் டிரைவில் பவுண்டரி அடித்து விராட் கோலி தனது 69-வது சர்வதேச சதத்தை நிறைவு செய்தார். இது அவருக்கு டெஸ்ட் அரங்கில் 26-வது சதமாகும். இதை 81 இன்னிங்ஸில் அடைந்துள்ளார் கோலி.
அதுமட்டுமல்லாமல் கேப்டனாக இருந்து 40 சதங்களை அடித்த முதல் இந்திய வீரர், கேப்டன் எனும் சாதனையை விராட் கோலி படைத்தார்.முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கேப்டனாக இருந்து 41 சதங்கள் அடித்துள்ளார். அதை முறியடிக்க கோலிக்கு இன்னும் இரு சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக கோலி அடிக்கும் 19-வது சதமாகும். இதன் மூலம் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாண்டிங்கின் 19-வது சதத்தை சமன் செய்துள்ளார் கோலி. முதலிடத்தில் 25 சதங்களுடன் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26-வது சதத்தை விராட் கோலி அடித்து, இந்திய அணியின் முன்னாள்கேப்டன் சுனில் கவாஸ்கரின் 26-வது டெஸ்ட் சதத்தை சமன் செய்துள்ளார். இதன் மூலம் 26-வது சதம் அடித்த 4-வது வீரர் எனும் பெருமையை கோலி பெற்றார். கவாஸ்கர் 144 இன்னிங்ஸில் 26-வது சதத்தை அடித்த நிலையில் அதை கோலி 138 இன்னிங்ஸில் எட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் திலிப் வெங்சர்க்காரின் 6,868 ரன்கள் சாதனையை கோலி முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான ரன் அடித்த இந்திய வீரர்களில் 7-வது இடத்தில் கோலி உள்ளார். 2019-ம் ஆண்டில் டெஸ்ட் போட்டியில் கோலி அடிக்கும் முதல் சதம் இதுவாக அமைந்தது.
அதிக டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டன் பொறுப்பு ஏற்றிருந்த வகையில் சவுரவ் கங்குலி 50 போட்டிகளுக்கு பொறுப்பேற்று முதலிடத்தில் இருந்தார். அதை கோலி சமன் செய்துள்ளார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்திருந்தது. கோலி 63 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் இருந்து இன்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
இருவரையும் பிரிக்க காலையில் இருந்து தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் பலவாறு முயன்றும் பலன் அளிக்கவில்லை. ரபாடா, பிலாண்டர், நார்ட்ஜே என மூவரும் மாறி மாறி வேகப்பந்துவீச்சில் மிரட்டியும் ரஹானே, கோலி நங்கூரமிட்டு பேட் செய்தனர். 96.1 ஓவர்களில் இந்திய அணி 300 ரன்களை எட்டியது.
குறிப்பாக ரபாடா, பிலாண்டர் பந்துகள் காலையில் நன்கு ஸ்விங் ஆனதால், அதை மிகுந்த கவனத்துடன் கையாண்ட கோலி அதை லீவ் செய்து விளையாடி விக்கெட்டைக் காத்தார். ஆனாலும் பிலாண்டர் பந்தை கோலி லேசாகத் தொட்டதால் விக்கெட் கீப்பர் டீ காக்கிடம் சென்றது. ஆனால், அதை கேட்ச் பிடிக்காமல் டீ காக் தவறவிட்டார். கோலியை வெறுப்பேற்றும் நார்ட்ஜே சில பந்துகளை பவுன்ஸர்களாக வீசினார். ஆனால், தனக்கே உரிய ஷாட்களால் கோலி பவுண்டரிக்குத் தள்ளினார்.
சிறப்பாக ஆடிய கேப்டன் விராட் கோலி, 173 பந்துகளில் தனது டெஸ்ட் அரங்கில் 26-வது சதத்தை அடித்தார். இந்த ஆண்டில் விராட் கோலி டெஸ்ட் அரங்கில் அடிக்கும் முதல் சதமாகும். நிதானமாக பேட் செய்த ரஹானே 141 பந்துகளில் 20-வது அரை சதம் அடித்தார்.
நண்பகல் உணவு இடைவேளை வரை இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 104 ரன்களுடனும் (18 பவுண்டரிகள்), ரஹானே 58 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.