

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் விளையாடி வரும் மும்பை சிட்டி எப்.சி. அணி கடந்த முறை தங்கள் அணிக்காக விளையாடிய பிரேசில் மிட்பீல்டர் ஆண்ட்ரூ மோரிட்ஸை 2-வது சீசனுக்கும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
கடந்த சீசனில் மும்பை அணிக்காக விளையாடிய வெளிநாட்டு வீரர்களில் சிறந்த வீரராக பேசப்பட்ட மோரிட்ஸ், 7 ஆட்டங்களில் விளையாடி புனேவுக்கு எதிராக ஹாட்ரிக் கோலடித்தார். இதுதவிர மும்பை அணி சில கோல்களை அடிக்கவும் உதவினார்.
கடந்த சீசனைப் போன்றே இந்த சீசனிலும் உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தையும், அனுபவத்தையும் மோரிட்ஸ் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் ஆற்றல் பெற்றவரான மோரிட்ஸ், போட்டியின்போது சகவீரர்களுடன் தகவல் பரிமாறுவதோடு, ஓய்வறையில் அனைவரையும் ஈர்க்கும் ஆற்றல் பெற்றவர்.
துருக்கி, பிரேசில் லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் பெற்றவரான மோரிட்ஸ், மும்பை அணியில் இணைவதற்கு முன்னதாக இங்கிலாந்து சாம்பியன்ஷிப்பில் 2-வது டிவிசன் போட்டியில் போல்டான் வான்டரெர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார்.
மும்பை சிட்டி அணிக்காக 2-வது சீசனில் விளையாடவுள்ளது குறித்துப் பேசிய மோரிட்ஸ், “மும்பை அணிக்காக மீண்டும் விளையாடவிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த சீசனில் இறுதிவரை ரசிகர்கள் எங்களுக்கு நல்ல ஆதரவு அளித்தனர். இந்த முறையும் சிறப்பாக ஆடி ரசிகர்களை மகிழ்விக்க விரும்புகிறோம்” என்றார்.
நிகோலஸ் அனெல்கா, இந்திய கேப்டன் சுனில் சேத்ரி, மோரிட்ஸ் என வலுவான வீரர்களைக் கொண்டிருக்கும் மும்பை அணி தனது முதல் ஆட்டத்தில் புனே சிட்டி அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறுகிறது.