

புனே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் கசப்பான புன்னகையுடன் தென் ஆப்பிரிக்கா கேப்டன் மீண்டும் ஒரு டாஸில் தோற்று சற்றே வேகப்பந்துக்கு உதவிய ஆடுகளத்தை அவர் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றே கூற வேண்டும், இதனையடுத்து முதல் நாளில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்தது.
மழையினால் பிட்சில் ஈரப்பதமும் கொஞ்சம் ஆங்காங்கே புற்களும் தென்பட பந்துகள் ஸ்விங் ஆனதோடு கொஞ்சம் முதுகை வளைத்தால் எழுச்சியும் கொண்டதாக இருந்தது. ஆனால் அந்த முதல் 1 மணி நேரத்தில் தென் ஆப்பிரிக்கா நன்றாக வீசினாலும் அதிர்ஷ்டம் இல்லை. பந்துகள் காற்றில் பீல்டர்கள் கைக்குச் செல்லவில்லை, ரோஹித் சர்மா ரபாடா பந்தில் அடித்த ஹூக் ஷாட் பீல்டருக்கு முன்னால் விழுந்தது. நிறைய பந்துகள் மட்டையைக் கடந்து சென்றன, ஆனால் எட்ஜ் ஆகவில்லை. எட்ஜ் ஆனாலும் பீல்டர்களுக்குத் தள்ளிச் சென்றது.
ஒரு முறை மயங்க் அகர்வால் பிளம்ப் எல்.பி.ஆனார், பிலாந்தர் பந்து ஒன்று இன்ஸ்விங்கராக அகர்வால் தன் முன்காலை நீட்டி ஆடும்போது ஸ்டம்பின் லைனில் பந்து கால்காப்பைத் தாக்கியது நடுவர் ஏன் அவுட் தரவில்லை என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம், ரிவியூவும் களநடுவர் தீர்ப்பை ஏற்றுக் கொண்டது.
ஆனால் அதன் பிறகு மயங்க் அகர்வால் பவுண்டரிகளாக அடித்துத் தள்ளினார் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் கண்டார், இதில் நார்ட்யேவின் வேகப்பந்து வீச்சு அவரைக் கொஞ்சம் கடினப்படுத்தினாலும் அவர் சரியான லெந்த்தைக் கண்டுபிடிக்காத போது அகர்வால் அவரை தொடர்ச்சியாக 3 பவுண்டர்கள் விளாசினார், நார்ட்யே மட்டும் கொஞ்சம் அவரது செல்வாக்குக்கு ஏற்ப வீசியிருந்தால் உதவிகரமான பிட்சில் இந்திய அணியை நிலைகுலையச் செய்திருக்க முடியும், அவர் கடைசியில் மயங்க் அகர்வாலுக்கு வெறும் ஷார்ட் பிட்ச் பவுலிங்காக வீசி அச்சுறுத்தப்பார்த்ததில் ரன் வேகம் குறைந்ததே தவிர காரிய லாபம் கிடைக்கவில்லை.
13 ஓவர்களில் 60 ரன்கள் என்று நார்ட்யே சொதப்பினார். மயங்க் அகர்வால், மஹராஜை சிறப்பாகவே ஆடினார், 87 ரன்களில் இருந்த போது 2 சிக்சர்கள் விளாசி 99 ரன்களுக்கு வந்தவர் பிறகு காற்றில் தேர்ட் மேன் திசையில் பிலாண்டரை பவுண்டரி அடித்து சதம் கண்டார், தொடர்ச்சியான 2வது டெஸ்ட் சதமாகும் இது.
ஆனால் சதம் எடுத்தவுடன் 108 ரன்களில் அவர் ரபாடாவிடம் ஆட்டமிழந்தார். புஜாரா 13 பந்துகள் எடுத்துக் கொண்டார் முதல் ரன்னை எடுக்க, ஆனாலும் ஸ்பின்னர்களை மேலேறி வந்து இடைவெளிகளை நன்றாகப் பயன்படுத்தி ரன்களை எடுத்தார். இவரும் நல்ல ஒரு அரைசதத்துடன் 58 ரன்களில் ரபாடாவிடம் வெளியேறினார். 61 ஓவர்கள் ஆன பழைய பந்தில், அதுவும் புஜாரா அரைசதம் எடுத்த பிறகு அவர் எட்ஜைப் பிடித்தது ஒரு தனித்துவ சாதனையே.
அகர்வால் ஆட்டமிழந்த பிறகு ஒரு விக்கெட்டைக் காலி செய்திருந்தால் சஹா, அஸ்வின் என்று பின் வரிசை வீரர்களுக்கு கதவுகள் திறந்திருக்கும், ஆனால் விராட் கோலி மஹராஜ் பந்துவீச்சில் அவரிடமே ஒரு கேட்சைக் கொடுத்தது தவிர வேறு தவறு செய்யவில்லை, மஹராஜ் அந்த வாய்ப்பை தவற விட்டார். கோலி 105 பந்துகளில் பிரமாதமான 10 பவுண்டரிகளுடன் 63 ரன்கள் எடுத்தும் ரஹானே 70 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ரன்கள் எடுத்தும் களத்தில் நிற்க இந்திய அணி 273/3 என்று முதல்நாளை முடித்தது.