டிராவில் முடிந்தது இந்தியா-ஆஸி. ஏ அணிகள் டெஸ்ட்
இந்தியா-ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான அதிகாரப் பூர்வமற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
சென்னையில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 114.3 ஓவர்களில் 301 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் கே.எல்.ராகுல் 96, கேப்டன் புஜாரா 55, சங்கர் 51, ஸ்ரேயாஸ் ஐயர் 39 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் ஓ’கீஃப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து பேட் செய்த ஆஸ்திரேலிய ஏ அணி 99.3 ஓவர்களில் 268 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹேண்ட்ஸ்காம்ப் 91, ஸ்டாய்னிஸ் 77 ரன்கள் எடுத்தனர். இந்தியத் தரப்பில் பிரக்யான் ஓஜா 5 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய அணி 78.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து 55 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட் செய்த ஆஸ்திரேலியா ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியத் தரப்பில் பான்கிராப் 51, டிராவிஸ் ஹெட் 50 ரன்கள் எடுத்தனர்.
