Published : 09 Oct 2019 05:54 PM
Last Updated : 09 Oct 2019 05:54 PM

தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி: தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிராக நாளை புனேவில் 2-வது டெஸ்ட் 

புனே

புனேவில் நாளை தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் விளையாடிவரும் இந்திய அணி, முதல் போட்டியில் வென்று 40 புள்ளிகளுடன் பட்டியலில் 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

நாளை தொடங்கும் போட்டியிலும் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டால் தொடரை வெல்லலாம்.

விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் விராட் கோலி, ராஹனே, விருதிமான் சாஹா, ஹனுமா விஹாரி ஆகியோர் முழுமையாக திறமையை வெளிப்படுத்தி விளையாடவில்லை. இவர்களுக்கு வேலை கொடுக்காத வகையில் முதல் இன்னிங்ஸில் மயங்க் அக்ரவாலின இரட்டை சதம், ரோஹித் சர்மாவின் சதம் ஆகியவையும், 2-வது இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவின் சதம், புஜாராவின் ஆட்டம் ஆகியவையும் எளிதாக ரன்களைப் பெற்றுக்கொடுத்தன.

பந்துவீச்சில் முதல் இன்னிங்ஸில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். 2-வது இன்னிங்ஸில் முகமது ஷமி தனது ஸ்விங் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார். அவருக்குத் துணையாக ரவிந்திர ஜடேஜாவும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மாபெரும் வெற்றிக்கு வழிகாட்டினார்கள்.

டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக அறிமுகமாவதற்கு ரோஹித் சர்மா பொருத்தமானவரா இருப்பாரா என்று கேள்வி எழுப்பியவர்களுக்கு மத்தியில் ரோஹித் சர்மா தனது இரு சதத்தால் பதில் அளித்தார். நாளை தொடங்கும் 2-வது டெஸ்ட் போட்டியிலும் ரோஹித் சர்மா அதே ஃபார்முடன் தொடர்வார் என நம்பலாம்.

மயங்க் அகர்வால் உள்நாட்டில் நடக்கும் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இவரின் இரட்டை சதம் தொடக்க வீரருக்குரிய மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறது.

நடுவரிசையில் புஜாரா, விராட் கோலி, ராஹனே, ஹனுமா விஹாரி, விருதிமான் சாஹா என வலிமையான பேட்டிங் வரிசை இருந்தாலும், நாளை இவர்கள் அனைவரும் தங்களை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர்.

ஏனென்றால், புனே மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியான மைதானமாகும். முதல் இரு நாட்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். அதன்பின் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் இருக்கும்.

இந்த மைதானத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது. அதுதான் இங்கு விளையாடப்பட்ட முதலாவது போட்டியாகும். நாளை நடக்க இருப்பது 2-வது டெஸ்ட் போட்டி.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் ஆஸி. சுழற்பந்துவீச்சாளர்கள் ஓகீபே, நாதன் லயன் ஆகியோரிடம் இந்திய வீரர்கள் சரணடைந்து 300 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள்.

ஆதலால் நாளை நடக்கும் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது. வழக்கம் போல் அஸ்வின், ரவிந்திர ஜடேஜாவுக்கு அதிகமான விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பு ஏற்படும்.

இந்திய அணிக்கு எந்த விதத்திலும் சளைக்காமல் தென் ஆப்பிரிக்காவிலும் டீன் எல்கர், குயின்டன் டீ காக், டூப்பிளசிஸ் என வலிமையான பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆனால், கடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக பேட் செய்த எல்கர், டீ காக் இருவரும் 2-வது இன்னிங்ஸில் விரைவாக வெளியேறினார்கள்.

தென் ஆப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை ஸ்திரமான பேட்டிங் இல்லாதது பெரும் குறை. பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்களான ரபாடா, பவுமா, பிலான்டர் ஆகியோரைக் காட்டிலும் கேசவ் மகராஜ், முத்துசாமி ஆகியோர் கடந்த போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினார்கள்.

இந்த ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் கேசவ் மகராஜ், முத்துசாமிக்கும் பந்துவீச்சு ஓரளவுக்கு எடுபடும்.

இந்திய அணியில் நாளை நடக்கும் போட்டியில் பெரும்பாலும் மாற்றம் இருக்காது. ஆனால், தென் ஆப்பிரிக்க அணியில் முத்துசாமி, டேன் பீடிட் இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு கூடுதலாக வேகப்பந்துவீச்சாளர் ஒருவர் தேர்வு செய்யப்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x