

இங்கு நமக்குத் தரப்படும் பிட்ச்களை நாம் கேட்டுப் பெறுவதல்ல, எங்களைப் பொறுத்தவரை பிட்ச் எப்படி என்றெல்லாம் யோசிப்பதில்லை எந்த சூழ்நிலையும் இந்திய சுழ்நிலைமைதான் என்று பார்க்க, விளையாடப் பழகி விட்டோம் என்கிறார் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண்.
பாரத் அருண் பயிற்சியின் கீழ் இந்திய வேகப்பந்து வீச்சு கடும் முன்னேற்றங்களைக் கண்டுள்ளது மறுப்பதற்கில்லை, குறிப்பாக உடல்தகுதி, லைன் மற்றும் லெந்த், அயல்நாட்டுப் பிட்ச்களில் வீசும் விதம் என்று வெற்றிகளில் வேகப்பந்து வீச்சின் பங்களிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பதுதான் நிதர்சனம்.
இந்நிலையில் விசாகப்பட்டிணம் உட்பட இந்திய பிட்ச்கள் பற்றியும் நம் பவுலிங் வரிசை பற்றியும் அவர் அளித்த பேட்டி வருமாறு:
எங்களுக்குக் கொடுக்கப்படும் பிட்ச்கள் நாங்கள் வேண்டும் என்று கேட்டுப் பெறுவதல்ல, உலகின் நம்பர் 1 அணியாக எங்கள் வழியில் வரும் எந்த ஒரு சூழ்நிலையும் இந்தியச் சூழ்நிலையை ஒத்திருப்பதாகப் பார்க்க, அதற்கேற்ப விளையாட பழகிவிட்டோம்.
திறமைகளை நம்பி வளர்த்தெடுப்பதுதான் குறிக்கோளே தவிர பிட்ச் உள்ளிட்ட ஆட்டச்சூழ்நிலையில் அடிமைகளாக இருப்பதல்ல. அயல்நாடுகளுக்கு பயணிக்கும் போதெல்லாம் அங்கு காணப்படும் பிட்ச்கள் நம் பிட்ச்களே, இருஅணிக்கும் அதே பிட்ச்தானே என்றுதான் பார்க்கிறோம். பவுலிங்கில் பயிற்சி பெறுவோமே தவிர பிட்சைப் பார்ப்பதில்லை.
அயல்நாடுகளில் நமக்கு வேகப்பந்து வீச்சு ஆட்டக்களம் அமைகிறது என்றால் உடனே நாம், ‘ஓ, இந்திய பேட்ஸ்மென்கள் இதில் விளையாடக் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிறோம். அதாவது வேகப்பந்து வீச்சு ஆட்டக்களம் நல்ல ஆட்டக்களம் என்றும் ஸ்பின் பிட்ச் என்றால் உடனே ஐயையோ முதல் நாளே பந்துகள் ஸ்பின் ஆகிறதா’ என்று கேட்கிறோம். வேகம் ஸ்விங்குக்கு சாதக ஆட்டக்களம் என்றால் ஏற்றுக் கொள்கிறோம் ஸ்பின் ஆட்டக்களம் என்றால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.
பொதுவாக இயல்பான தேய்மானம் கொண்ட பிட்ச்கள் நல்லதுதான், ஆனால் நம்பர் 1 அணியாக வேண்டுமென்றால் பிட்ச்களைப் பெரிது படுத்தக் கூடாது. பந்து வீச்சை, பேட்டிங்கை அதற்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ள வேண்டும். ஷமி விசாகப்பட்டணம் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இதைத்தான் செய்தார்” என்றார் பாரத் அருண்.