

தொடக்க வீரராக ரோஹித் சர்மாவின் புதிய அவதாரம் டெஸ்ட் உலகிலும் அவரை முடிசூடா மன்னனாக்கும் என்று கூறும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், 2019 உலகக்கோப்பை முடிந்தவுடன் ஷமி தன்னிடம் வருத்தத்துடன் பேசியதாக தெரிவித்துள்ளார்.
ஷோயப் அக்தர் தன் யூடியூப் சேனலில் கூறும்போது,
“ரோஹித் சர்மா நூறு நூறாக அடித்து வருகிறார், அவர் டெஸ்ட் அணியில் இருக்க வேண்டும் என்று நான் சிலகாலமாகக் கூறிவந்தேன். இங்கிருந்து அவர் உலகின் சிறந்த டெஸ்ட் வீரராக உயர்வு பெறுவார். ரோஹித் டெஸ்ட் அரங்கிலும் முடிசூடா மன்னனாகத் திகழ்வார்.
2019 உலகக்கோப்பை முடிந்தவுடன் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி என்னைத் தொடர்பு கொண்டு இந்தியாவுக்காக தன்னால் சரியாக ஆடமுடியவில்லையே என்று வருத்தமும் ஏமாற்றமும் தெரிவித்தார். கவலை வேண்டாம் உடற்தகுதியை சரியாக வைத்துக் கொள் மனவலுவை இழந்து விடாதே, உள்நாட்டுத் தொடர் வருகிறது, அதில் சிறப்பாக வீசுவாய் என்றேன்.
மேலும் நான் ஷமி என்ற பவுலர் பேட்டிங் வரிசைகளை ஊடுருவி வீழ்த்தும் பவுலராக வேண்டும் என்றேன், அவரிடம் நல்ல ஸ்விங் உள்ளது, அதே போல் துணைக்கண்டத்தில் வெகுசிலரிடமே உள்ள ரிவர்ஸ் ஸ்விங் கலையும் உள்ளது.
இப்போது பாருங்கள் மந்தமான விசாகப்பட்டணம் பிட்சில் அவர் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவருக்காக உண்மையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னிடம் ஷமி போன்ற இந்திய பவுலர்கள் எப்படி முன்னேற்றம் காண்பது என்று அறிவுரை கேட்கின்றனர், ஆனால் பாகிஸ்தானின் இளம் பவுலர்கள் என்னிடம் ஆலோசனைகளைக் கேட்பதேயில்லை. என் நாட்டைப் பொறுத்தவரை இது வருந்தத்தக்க ஒரு சூழ்நிலைதான்.
விராட் கோலி பவுலர்களின் கேப்டனாகத் திகழ்கிறார்” என்றார் ஷோயப் அக்தர்.