Published : 08 Oct 2019 04:49 PM
Last Updated : 08 Oct 2019 04:49 PM

இங்கு ஸ்பின்னர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்று வேகப்பந்து வீச்சாளர்கள் நினைக்கும் காலம் மலையேறிவிட்டது: விராட் கோலி பெருமிதம்

வேகப்பந்து வீச்சாளர்களுக்குக் கடினமான ‘குழிபிட்ச்’ இந்தியாவிலும் கூட இந்திய வேகப்பந்து வீச்சு கூட்டணி சிறப்பாகச் செயல்படுவது குறித்து கேப்டன் விராட் கோலி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கணுக்காலுக்குக் கீழே சென்ற பந்துகளில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மென்கள் 2வது இன்னிங்சில் 5ம் நாளில் உணவு இடைவேளைக்கு முன்னதாகவி 7 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து கடைசியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்ததில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார், ஆனாலும் அவரும் கூட பிட்ச் சரியில்லை என்றுதான் கூறினார்.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில் தங்கள் சொந்தப் பிட்ச் சொத்தையாக இருந்தால் கேப்டன்கள் விமர்சிப்பது வழக்கம் அங்கு அவர்களுக்கு அத்தகைய சுதந்திரம் உள்ளது, ஆனால் இந்திய கேப்டன்கள் பெரும்பாலும் தோல்வி ஏற்படும் போதுதான் பிட்சைக் குறைகூறுபவர்களாக இருக்கிறார்கள், வெற்றி பெற்றால் ஏதோ திறமைதான் சாதித்தது என்பது போல் சாதிப்பார்கள், அந்த வகையில் விராட் கோலியும் வேகப்பந்து வீச்சாளர்களின் காயங்களுக்குக் காரணமாகும் ஆடுகளங்களை அமைத்து விட்டு அவர்களையே பாராட்டும் சாமர்த்தியத்துடன் ‘பிரமாதமாக’ பேசியுள்ளார்.

“இந்தப் பிட்சில்தான் நாம் 500 அடித்தோம் , ஆகவே பிட்சில் பிசாசுகள் எதுவும் இல்லை. அஸ்வின் 7 விக்கெட்டுகளை முதல் இன்னிங்சில் எடுத்தது அபாரமானது. இரண்டாவது இன்னிங்சில் ஜடேஜா சில விரைவுகதி விக்கெட்டுகளினால் சாதகம் செய்தார்.

வேகப்பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளாக அவர்களது அணுகுமுறை தனித்துவமானது என்றே கூற வேண்டும். இங்கெல்லாம் ஸ்பின்னர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று வேகப்பந்து வீச்சாளர்கள் நினைக்கும் காலம் மலையேறி விட்டது, அவர்களும் தங்கள் பங்களிப்பில் கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர்.

வெயில், வியர்வை என்ற காரணங்களினால் அவர்கள் ஸ்பின்னர்களிடம் விட்டு விடும் போக்கு இனி இல்லை. ஷமி, பும்ரா, இஷாந்த், உமேஷ் போன்றவர்கள் நாங்கள் என்ன விரும்புகிறோமோ அதைச் செய்கின்றனர். அவர்கள் ஓரிரு விக்கெட்டுகளை வீழ்த்துவதும் கூட ஸ்பின்னர்களுக்கு உதவிகரமாக உள்ளது” என்றார் விராட் கோலி.

எதிரணியின் பலத்துக்கு பிட்சை அமைத்து அதில் அவர்களை ஆட்கொள்வதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டின் விறுவிறுப்புக்கு முக்கியமானது, முதல் நாளே இந்தியா வெற்றி பெறும் என்பது போன்று பிட்சை அமைத்து விட்டு பவுலர்களைப் புகழ்வது என்பது ஆரோக்கியமான அணுகுமுறையாக்த் தெரியவில்லை.

அவர்கள் பேட் செய்த போது பிட்ச் உடைந்து வேலையைக் காட்டியதை மறைத்து விராட் கோலி இதே பிட்சில் நாமும் 500 ரன்கள் அடித்தோம் என்கிறார். சுயதம்பட்டம், சுய புகழ்ச்சி இருக்க வேண்டியதுதான் அதற்காக சாதகசூழல்களை நம் பக்கம் வைத்துக் கொண்டு இதே பிட்சில் நாங்களும் 500 அடித்தோம் என்று பேசுவது சர்வதேச கேப்டனுக்கு ஒவ்வாது என்பதே கிரிக்கெட் நிபுணர்களின் வாதமாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x