

அடுத்த வாரம் டென்மார்க்கில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தனக்கும், தனது பயிற்சியாளருக்கும் விசா வழங்குமாறு இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சாய்னா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில், ”டென்மார்க் செல்வதற்காக எனக்கும், எனது பயிற்சியாளருக்கும் விசா அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன். நான் அடுத்த வாரம் டென்மார்க்கில் உள்ள ஒடென்ஸில் நடைபெறும் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்பதற்காகச் செல்ல இருக்கிறேன். ஆனால் இதுவரை எனக்கு விசா வழங்கப்படவில்லை. எங்களுடைய போட்டிகள் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
புதிதாக வந்த விதிமுறைகளின்படி டென்மார்க் செல்ல விசா வேண்டுபவர்கள் தலைநகர் டெல்லியில் நடைபெறும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். எனவே இது தொடர்பாக இந்திய பாட்மிண்டன் அமைப்பு இந்தியத் தூதரகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது.
இந்தப் பிரச்சினை விரைவில் சரி செய்யப்படும் என்று இந்தியத் தூதரகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.