

துபாய்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா புதிய உயர்வைப் பெற்றுள்ளார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸிலும்(176, 127) சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 17-வது இடத்துக்கு ரோஹித் சர்மா முன்னேறியுள்ளார்.
இந்திய அணியின் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் டெஸ்ட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததையடுத்து தரவரிசையில் 38 இடங்கள் உயர்ந்து, 25-வது இடத்துக்கு முன்னேறியுல்ளார்.
கேப்டன் விராட் கோலி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரிக்குப் பின் 900 புள்ளிகளுக்கு கீழ் குறைந்து தொடரந்து 2-வது இடத்தில் 899 புள்ளிகளுடன் நீடிக்கிறார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 937 புள்ளிகளுடன் உள்ளார்.
இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வீழ்த்தியதையடுத்து பந்துவீச்சாளர்கள் டாப்10 வரிசையில் இடம் பிடித்து 10-வது இடத்தை அடைந்துள்ளார். இதற்கு முன் 14-வது இடத்தில் அஸ்வின் இருந்தார். ஆல்ரவுண்டர்கள் வரிசையிலும் அஸ்வின் முதல் 5 இடங்களுக்குள் உள்ளார்
மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி 18-வது இடத்தில் இருந்து 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீசசாளர் தரவரிசையில் 710 புள்ளிகளை ஷமி பெற்று இருப்பது இதுதான் முதல் முறையாகும்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ரவிந்திர ஜடேஜா 2-வது இடத்துக்கு உயர்ந்து, வங்கதேச வீரர் சகிப் அல்ஹசனை 3-வது இடத்துக்கு பின்தங்க வைத்துள்ளார்.
தென் ஆப்பிரிக்க வீரர் டீ காக் சதம் அடித்ததையடுத்து, பேட்ஸ்மேன்கள் வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பெற்று 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். எல்கர் 5 இடங்கள் முன்னேறி 14-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வென்றதையடுத்து, டெஸ்ட்சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
நியூஸிலாந்து, இலங்கை தலா 60 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் தலா 56 புள்ளிகளுடனும் உள்ளன.
பிடிஐ