Published : 06 Oct 2019 01:28 PM
Last Updated : 06 Oct 2019 01:28 PM

பும்ராவின் காயம் அச்சுறுத்தும் அவரது தனித்துவ ஆக்‌ஷனை காவு  வாங்கி விடுமா?

இன்றைய கிரிக்கெட்டில் உலகின் அச்சுறுத்தும் பவுலர் என்றால் அது பும்ராதான், அவரை ஆடுவது கடினம் ஏனெனில் அவரது தனித்துவமான பவுலிங் ஆக்‌ஷன் தான். சமீபத்தில் அவர் காயமடைந்திருப்பதால் அவரது இந்தத் தனித்துவ ஆக்‌ஷன் முடிவுக்கு வந்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

உலகில் சிலபல பவுலர்க்ளுக்கு இப்படி நடந்துள்ளது, குறிப்பாக ஆண்ட்ரூ பிளிண்டாஃப் பவுலிங்கை ஆக்‌ஷனை முடிக்கும் போது வலது பாதம் சற்றே வலது புறமாகத் திரும்பியிருக்கும் இதனால் அவரது பந்துகளில் வேகம் அதிகம் இருந்தது, ஆனால் காயங்களினால் அடிக்கடி வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஆலன் டோனால்ட் அறிவுரையின் பேரில் பிளிண்டாஃப் நேராக வந்து பின் கால் பாதம் நேராக இருக்குமாறு மாற்றிக் கொண்டார். இது கொஞ்சம் அவரது வேகத்தைக் குறைத்தது என்றே கூற வேண்டும்.

ஏன் ஆக்‌ஷனை மாற்றிய சயீத் அஜ்மல் என்ற புலி பூனையாக மாறிய கதையையும் நாம் அறிவோம்.

இந்நிலையில் முன்னாள் உடற்கோப்புப் பயிற்சியாளர் ஆண்ட்ரூ லெய்ப்பஸிடம் ஸ்போர்ட்ஸ்டார் நேர்காணல் கண்டு பும்ராவின் ஸ்ட்ரெஸ் பிராக்சர் பற்றி கேட்ட போது,

“ஒருவரது கரியரின் உச்சத்தில் இருக்கும் போது அவரது பவுலிங் ஆக்‌ஷனை மாற்றுவது உத்தரவாதமாக அவருக்கு வெற்றியைக் கொடுக்கும் என்று கூற முடியாது, வேகம் குறையும் லைன் அண்ட் லெந்த் மாறிவிடும், கட்டுப்பாடு இழக்கக் கூடும்.

ஆனால் இவையெல்லாம் என்னென்ன மாதிரியான ஆக்‌ஷன் மாற்றங்கள் எந்த அளவுக்கு மேற்கொள்ளப்படும் என்பதைப் பொறுத்துதான் முடிவு செய்யப்படும்.

இதுதான் பும்ராவின் முதல் ஸ்ட்ரெஸ் எலும்பு முறிவு, இது அடிக்கடி நிகழும் நிகழ்வு என்று நான் கருதவில்லை. ஆம் உடல் இயக்கம் என்பது இதில் முக்கியம், அதாவது பந்து வீசும் போது உடல் எடை எந்தப் பக்கம் அதிகமாக சாய்கிறது என்பதை முதலில் கணிக்க வேண்டும். ஆகவே அந்தப் பகுதியில் முதலில் சுமையைக் குறைக்க வேண்டும்.

இதனைப் பலவழிமுறைகளில் செய்ய முடியும். மூட்டின் இயக்கம் உள்ளிட்டவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

ஆக்‌ஷன் தான் ஸ்ட்ரெஸ் பிராக்சருக்குக் காரணம் என்பதை ஐயமற தெரிந்து கொண்ட பிறகே அதை மாற்றுமாறு ஆலோசனை வழங்க வேண்டும், இல்லையெனில் அது அவரை இதுகாறும் இருந்து வரும் அச்சுறுத்தலான பவுலர் என்ற வலுவை இழக்க நேரிடும்” என்கிறார் லெய்ப்பஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x