

விசாகப்பட்டினம்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் சமன் செய்து பெருமை சேர்த்துள்ளார்.
முத்தையா முரளிதரன் தனது 66-வது டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதேபோலவே அஸ்வினும் தனது 66-வது டெஸ்ட் போட்டியில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்
இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் இடையே முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் அஸ்வின் தனது மாயஜால சுழற்பந்துவீ்ச்சால் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 5 விக்கெட்டுகளை 27-வது முறையாக வீழ்த்தினார்
இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் முரளிதரன் சாதனையை சமன் செய்ய ஒரு விக்கெட் மட்டும் அஸ்வினுக்கு தேவைப்பட்டது.
2-வது இன்னிங்ஸில் இன்று தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. அதில் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன் தீனுஸ் டி புருயின் வி்க்கெட்டை அஸ்வின் வீழ்த்தியபோது, டெஸ்ட் அரங்கில் 350 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
395 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்துவீச்சாளருமன அனில் கும்ப்ளே தனது 77-வது போட்டியில்தான் 350 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்த 2011-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற அஸ்வின், 66-வது போட்டிகளில் 349 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடைய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அணியில் இடம் பெற்றும், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை சேர்க்கப்பட்டு இருந்திருந்தால், முத்தையா முரளிதரனின் சாதனையை அஸ்வின் முறியடித்திருப்பார்.
பிடிஐ