

விசாகப்பட்டிணம் டெஸ்ட் போட்டியின் 4ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்காவை முதல் இன்னிங்சில் 431 ரன்களுக்கு ஆல் அவுட் செய்த இந்திய அணி 2வது இன்னிங்சில் ஓவருக்கு 4.82 ரன் விகிதத்துடன் 323/4 என்று டிக்ளேர் செய்து தென் ஆப்பிரிக்காவுக்கு 395 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
ஆட்ட முடிவில் டீன் எல்கர் என்ற தென் ஆப்பிரிக்க சுவரை ஜடேஜா எல்.பி. முறையில் வீழ்த்த அந்த அணி 11/1 என்று நாளை தோல்வியைத் தவிர்க்க போராட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இதற்குக் காரணம் ரோஹித் சர்மா 149 பந்துகளில் 10 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 127 ரன்கள் எடுத்ததால் டிக்ளேரை துரிதப் படுத்த முடிந்தது. ஆனால் டுபிளெசிஸ் கேப்டன்சி விசித்திரமாக அமைந்ததும், இந்திய ரன் குவிப்புக்கு பிரதான காரணமாக அமைந்தது.
களவியூகம் பந்து வீச்சுப் பகிர்வு என்று டுபிளெசிஸ் நிறையத் தவறுகளைச் செய்தார் புஜாராவுக்கு ஆரம்பத்திலேயே டி காக் ஸ்டம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார்அந்தப் பந்து இன்சைடு எட்ஜும் ஆனது, இந்த வாய்ப்பு தவற விட்ட பிறகே புஜாரா அடித்து ஆடத் தொடங்கினார். அதாவது 62 பந்துகளில் 8 ரன்கள் இருந்த புஜாரா கடைசியில் 148 பந்துகளில் 13 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என்று 81 ரன்களை அதிரடியாக எடுத்தார்.
டுபிளெசிஸ் செய்த தவறு என்னவெனில் பிலாண்டரின் சிக்கன விகிதம் ஓவருக்கு 1.75 ரன்கள், ரபாடாவின் சிக்கன விகிதம் 3.15, இவர்களை ஒரு முனையில் மாறி மாறி பயன்படுத்தாமல் ஸ்பின்னர்களுக்கு 42 ஓவர்களை அவர் அளித்தார் அதுவும் களவியூகம் மோசமாக அமைந்தது. ரன்களைக் கட்டுப்படுத்தத் தவறினார் டுப்ளெசிஸ்.
இந்தியா 2வது இன்னிங்சில் ஆடிய 67 ஓவர்களில் 42 ஓவர்களில், ஸ்பின்னர்கள் வீசிய ஓவர்களில் மஹராஜ் தனது 22 ஓவர்களில் 129 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார், இவர் ஓவருக்கு 5.86 என்ற விகிதத்தில் விட்டுக் கொடுத்தார், பியட் 17 ஓவர்கள் 102 ரன்கள் விக்கெட் இல்லை. ஓவருக்கு 6 ரன்கள். முத்துசாமி 3 ஓவர்களில் 19 ரன்கள் ஆக இவர்கள் 42 ஓவர்களில் 250 ரன்களை இவர்கள் விட்டுக் கொடுத்தனர். ரபாடா, பிலாண்டர் இணைந்து 25 ஓவர்கள் 8 மெய்டன், 62 ரன்கள் 2 விக்கெட்டுகள்., இப்போது புரியும் டுபிளெசிஸ் செய்த தவறு என்னவென்று.
20 ஒவர்களில் 52/1 என்று இருந்தது தென் ஆப்பிரிக்கா இதில் ரோஹித் சர்மா 40 ரன்கள், ஆகவே ரோஹித் சர்மா இன்னிங்ஸ் அசாத்தியமானது என்று கூற வேண்டும். 30 ஓவர்கள் முடிவில் 82/1 ரோஹித் சர்மா 50, புஜாரா 24 பேட்டிங். மொத்தம் விளையாடிய 67 ஓவர்களில் முதல் 30 ஓவர்களில் இந்திய அணி 82/1 அதன் பிறகு 37 ஓவர்களில் 241 ரன்கள். அதாவது ஓவருக்கு 6 ரன்களுக்கும் மேல் அடித்து நொறுக்கினர். இந்தப் பகுதியில்தான் டுபிளெசிஸ் கேப்டன்சி விசித்திரமாக இருந்தது, ஏனெனில் ஒரு முனையில் ஸ்பின் இன்னொரு முனையில் டைட்டாக்க வேகப்பந்து வீச்சு என்று அவர் கொடுத்திருந்தால் இந்த வேகத்தில் ரன்களை எடுக்க முடிந்திருக்காது என்பதே நிதர்சனம். இதனால் இன்று டிக்ளேர் தாமதாகியிருக்கும் ஏனெனில் விராட் கோலியும் ஒரு பயந்தாங்கொள்ளி கேப்டன் தான், 400 ரன்கள் பக்கம் இல்லாமல் டிக்ளேர் செய்திருக்க மாட்டார். அப்படி இந்திய ரன் வேகத்தைக் கட்டுப்படுத்தியிருந்தால் டிக்ளேர் தாமதமாக இன்று மிக முக்கிய டீன் எல்கர் விக்கெட்டை இழந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
புஜாரா மீதான கட்டுப்பாட்டை சொதப்பலினால் இழந்த தென் ஆப்பிரிக்கா அவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளை வாரி வழங்கியது, பீல்டர்கள் கையில் அடித்துக் கொண்டிருந்த புஜாரா திடீரென இடைவெளியை ஊடுருவத் தொடங்கியது எப்படி என்பதுதான் டுபிளெசிஸ் மீதான கேள்வியே.
ரோஹித் சர்மா சிக்ஸ் அடிப்பதில் வல்லவர் என்று நிரூபித்தார், ஒரு சிக்ஸ் மட்டும் பவுண்டரியில் முத்துசாமியிடம் கேட்ச் ஆனது ஆனால் அவர் எல்லையைக் கோட்டை மிதித்து விட்டார். மற்றபடி ரோஹித் சர்மாவின் இன்னிங்ஸ் மெஜெஸ்டிக் வகையறாவைச் சேர்ந்தது. மொத்தம் 27 சிக்சர்களை இந்திய அணி இந்த ஆட்டத்தில் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் சாதனையை நிகழ்த்தியது, இதற்கு முன்னர் ஒரு போட்டியில் 22 சிக்சர்கள்தான் சாதனையாக இருந்தது. கடைசியில் பிலாண்டர் மிக அருமையான பந்தின் மூலம் புஜாராவை வீழ்த்தினார் ஆனால் புஜாராவும் ரோஹித் சர்மாவும் ஏற்கெனவே செய்ய வேண்டிய சேதத்தை செய்து விட்டிருந்தனர்.
5ம் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடி வேண்டி வரும்.