

விசாகப்பட்டினம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் முன்ளாள் சுழற்பந்துவீ்ச்சாளர் முத்தையா முரளிதரன் சாதனையை சமன் செய்ய அஸ்வினுக்கு இன்னும் ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க அணி நாளை 2-வது இன்னிங்ஸை பேட் செய்து அதில் ஒரு விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினால், மிக விரைவாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்துவிடுவார்
விசாகப்பட்டினத்தில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை 26-வது முறையாக அஸ்வின் வீழ்த்தினார்.
தற்போது அஸ்வின் 66 டெஸ்ட் போட்டிகளில் 349 விக்கெட்டுகளுடன் உள்ளார். இன்னும் 350 விக்கெட்டுகளை எட்டுவதற்கு ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படுகிறது. முத்தையா முரளிதரனும் 2001-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான தனது 66-வது ஆட்டத்தில்தான் 350 விக்கெட்டுகளை எட்டினார். ஆகையால், அஸ்வின் 2-வது இன்னிங்ஸில் ஒருவிக்கெட் வீழ்த்தினால் முரளிதரன் சாதனையை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சுழற்பந்துவீச்சாளருமன அனில் கும்ப்ளே தனது 77-வது போட்டியில்தான் 350 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கடந்த 2011-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்ற அஸ்வின், 66-வது போட்டிகளில் 349 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடைய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் அணியில் இடம் பெற்றும், விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படவில்லை. ஒருவேளை சேர்க்கப்பட்டு இருந்திருந்தால், முத்தையா முரளிதரனின் சாதனையை அஸ்வின் முறியடித்திருப்பார்.
ஐஏஎன்எஸ்