அஸ்வின் அபாரம்: தெ.ஆப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது

7 விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் அஸ்வின் : படம் உதவி ட்விட்டர்
7 விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் அஸ்வின் : படம் உதவி ட்விட்டர்
Updated on
2 min read

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அபாரப் பந்துவீச்சால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் அபாரமாகப் பந்துவீசி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

8 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்களுடன் இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி கூடுதலாக 46 ரன்கள் சேர்த்து மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ரன்களைக் காட்டிலும் 71 ரன்கள் பின்தங்கியுள்ளது தென் ஆப்பிரிக்க அணி. இந்திய அணி ரோஹித் சர்மாவின் சதம், மயங்க் அகர்வாலின் இரட்டை சதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

பதிலடியாக தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் எல்கர் (160), டீ காக் (111) சதம் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தனது முதல் இன்னிங்ஸில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 385 ரன்கள் சேர்த்திருந்தது.

முத்துசாமி 12 ரன்களுடனும், கேசவ் மகராஜ் 3 ரன்களுடனும் இன்றைய 4-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். காலையில் இருந்தே அஸ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள முத்துசாமியும், மகராஜும் தடுமாறி ரன்களைச் சேர்த்தனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஏதுவாக ஒத்துழைத்ததால் நன்றாகச் சுழன்றது. இதனால் பந்தைக் கணித்து ஆடுவதில் சிரமம் ஏற்பட்டது.

ஆஸ்வின் வீசிய ஓவரில் லாங் ஆன் திசையில் நின்றிருந்த அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து மகராஜ் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ரபாடா, முத்துசாமியுடன் இணைந்தார். அதிரடியாக சில பவுண்டரிகளை அடித்த ரபாடா, 15 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.

இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி 131.2 ஓவர்களில் 431 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து, 71 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே கேசவ் மகராஜிடம் 7 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்தார் மயங்க் அகர்வால்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in