Published : 04 Oct 2019 10:34 AM
Last Updated : 04 Oct 2019 10:34 AM

ஐ.நா.வில் இம்ரான் கான் பேச்சு மோசமானது; எதற்கும் உதவாத குப்பை: கங்குலி காட்டம்

புதுடெல்லி

நியூயார்க்கில் ஐ.நா.பொதுக்குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு மோசமானது. எதற்கும் உதவாத குப்பை போன்று இருந்தது என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.சபையின் 74-வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 24-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடந்தது. இதில் 27-ம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், பிரதமர் மோடியும் பேசினர். இதில் பிரதமர் மோடி பேசும்போது, பாகிஸ்தான் குறித்து ஒருவார்த்தை தெரிவிக்கவில்லை, ஆனால் தீவிரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.

ஆனால், இம்ரான் கான் பேசும்போது, காஷ்மீர் பிரச்சினை குறித்தும், இந்தியாவைத் தாக்கியும் பேசினார். குறிப்பாத இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூளும் அபாயம் இருக்கிறது என்றும், ரத்தக்களறி என்றும் ஆவேசமான வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், முகமது ஷமி ஆகியோர் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்தார்கள். அமைதியைப் பரப்பும் வகையில் இம்ரான்கான் செயல்பட வேண்டும், வெறுப்பைப் பரப்பக்கூடாது என்று இருவரும் வலியுறுத்தினர்.

இதற்கிடையே முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் இம்ரான் கான் பேசும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதை விமர்சித்திருந்தார்.

— Virender Sehwag (@virendersehwag) October 3, 2019

அமெரிக்க செய்தி சேனல் ஒன்றிற்குப் பேட்டியளித்த இம்ரான் கான், அமெரிக்காவின் சாலை உள்கட்டமைப்பு வசதிகளைக் கிண்டலடித்து, “சீனாவுக்குச் சென்று பாருங்கள். அங்கு உள்கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்று... நியூயார்க்கில் நான் பார்க்கிறேன், கார்கள் குதித்துக் குதித்துச் செல்கின்றன” என்று அமெரிக்க சாலையைக் கிண்டலடித்தார்.

இது அமெரிக்கர்களிடையே வரவேற்பைப் பெறவில்லை, அவர்கள், “நீங்கள் பாகிஸ்தான் பிரதமர் போல் பேசவில்லை, பிராங்க்சிலிருந்து வரும் வெல்டர் போல் பேசுகிறீர்கள்” என்று தெரிவித்தனர்.

இந்த வீடியோவைத்தான் சேவாக் பகிர்ந்து, அதில், “சிலநாட்களுக்கு முன்பாக ஐ.நா.வில் மோசமாகப் பேசிய இம்ரான் கான் தற்போது தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ள புதிய வழிகளைக் கண்டுபிடித்துக் கொள்கிறார்” என்று சாடினார்.

சேவாக்கின் இந்த ட்வீட்டுக்கு முன்னாள் கேப்டன் கங்குலியும் பதில் அளித்திருந்தார்,

அதில், " வீரு, நான் இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இதுபோன்ற பேச்சை நான் கேட்டதில்லை. இந்த உலகிற்கு அமைதி தேவை. அதிலும் பாகிஸ்தான் போன்ற நாட்டுக்கு அமைதி மிகவும் அவசியம். ஆனால், அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கானின் பேச்சு இப்படி குப்பை போன்று இருக்கிறது. இம்ரான் கான் முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதை உலகம் அறியும். ஐ.நாவில் இவரின் பேச்சும் மிக மோசமாக இருந்தது" எனத் தெரிவித்துள்ளார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x