வெயிலில் விளையாடினால் கறுப்பாகி விடுவாய், உனக்குத் திருமணம் ஆகாது: சிறுபிராய முட்டுக்கட்டைகள் பற்றி சானியா வேதனை

வெயிலில் விளையாடினால் கறுப்பாகி விடுவாய், உனக்குத் திருமணம் ஆகாது: சிறுபிராய முட்டுக்கட்டைகள் பற்றி சானியா வேதனை
Updated on
2 min read

புதுடெல்லி, பிடிஐ

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா ஒரு பெண்ணாக தான் எத்தனை கடினப்பாடுகளைக் கடந்து வர வேண்டியிருந்தது என்பதைப் பற்றி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர், சிறுபிராயத்தில் டென்னிஸ் விளையாடும்போது வெயிலில் விளையாடினால் அவர் கருத்து விடுவார் என்றும் அதனால் அவரை ஒருவரும் திருமணம் செய்து கொள்ள முன்வரமாட்டார்கள் என்றும் பலரும் டென்னிஸை விட்டுவிடும்படி தன்னை வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

“ஆரம்பத்தில் பெற்றோர், அண்டை வீட்டார், அத்தைகள், மாமாக்கள் என்று நிறைய பேர் வெயிலில் விளையாடினால் கருத்துப் போய் விடுவாய் உன்னை யாரும் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று கூறுவார்கள், இந்தப் போக்கை அவர்கள் நிறுத்த வேண்டும். நான் 8 வயதாக இருக்கும் போது இதே போன்று என்னை பயமுறுத்தினார்கள், கருத்துப் போவாய் உன்னை திருமணம் செய்து கொள்ள யாரும் தயாராக இருக்க மாட்டார்கள் என்று கூறினர், ஆனால் நான் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.

இந்தப் பண்பாட்டில் இந்த அழகு, வெள்ளை நிறம் போன்றவை ஆழமாக உட்பொதிந்து விட்டது, பெண் என்றால் அழகாக இருக்க வேண்டும், சிகப்பாக இருக்க வேண்டும் என்பது இங்கு ஊறிப்போய்விட்டது, ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இந்த விஷயம் நிச்சயம் மாற வேண்டும்.

பெண்கள் விளையாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு நானும் ஒரு விதத்தில் தூண்டுகோலாக இருப்பது பெருமையாக இருக்கிறது. நான் பார்த்த வீராங்கனைகளில் பி.டி.உஷா என்னை மிகவும் பாதித்தார், எனக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர் அவர், இன்று பிவி.சிந்து, சாய்னா நெவால், தீபா கர்மாக்கர் இன்னும் பலர் முன்னேறி வந்துள்ளனர்.

ஆனாலும் இன்னும் கொஞ்சம் தொலைவு போக வேண்டும், இன்னமும் கூட சம வாய்ப்புகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை என்றே கருதுகிறேன், ஆனால் சூப்பர் ஸ்டாரக்ள் இருக்கின்றனர், கிரிக்கெட்டைத் தாண்டி இவரக்ள் பெரிய இடம் பிடித்துள்ள வீராங்கனைகள் ஆவார்கள்.

பெண்கள் என்றால் வீட்டு நிர்வாகத்துக்குத்தான் சரி, வீடுதான் அவர்களுக்கு நிரந்தர இடம் என்ற அணுகுமுறை இன்னமும் உள்ளது, ஒரு முறை மும்பை விமான நிலையத்தில் ஒருவர் என்னிடம் வந்து ‘தாய்மை உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது’ என்று கூறி புகைப்படம் எடுத்துக் கொண்டு என்னுடைய குழந்தை எங்கே என்றார், நான் ஹைதராபாத்தில் இருப்பதாகக் கூறினேன், உடனே அவர் ‘நீங்கள் உங்கள் மகனுடன் இருக்க வேண்டும்’ என்றார்.

நான் உடனே அவரிடம் உங்கள் குழந்தை எங்கே என்றேன், ‘வீட்டில்’ என்றார், நான் உடனே, ‘நீங்களும் உங்கள் குழந்தையுடன் இருக்க வேண்டும்’ என்றேன், என்னிடம் அப்படி அவர் கூறியது என்னைப் புண்படுத்தும் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.

ஆனால் ஊர்பேர் தெரியாதவர்கள் மட்டுமல்ல என் விஷயத்தில் என்னுடைய நெருங்கிய குடும்பத்தினரே இந்த மாதிரி கேள்விகளைக் கேட்பார்கள். நமக்கு நெருங்கியவர்கள்தான் தர்மசங்கடக் கேள்விகளைக் கேட்டு நமக்கு நம் மீதே சந்தேகம் ஏற்படச் செய்து விடுவார்கள்” என்றார் சானியா மிர்ஸா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in