

புதுடெல்லி
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அமைதியை ஊக்குவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். வெறுப்பை அல்ல என்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்பஜன் சிங், முகமது ஷமி விமர்சித்துள்ளனர்.
ஐ.நா.வில் கடந்த மாதம் நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதை சுட்டிக்காட்டி இந்தக் கருத்தை இருவரும் தெரிவித்துள்ளனர்.
ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி இம்ரான் கான் பேசுகையில், "இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையே மரபுரீதியான போர் மூண்டால் அது அணு ஆயுதப்போரில் முடியும். இந்தியாவைக் காட்டிலும் 7 மடங்கு சிறிய நாடாக இருந்தாலும், போர் என வந்துவிட்டால் சரண் அடைவோம் அல்லது சுதந்திரத்துக்காகப் போராடுவோம். முஸ்லிம்களை தீவிரவாதிகளாகச் சித்தரிப்பது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் இம்ரான் கான் பேச்சை விமர்சித்து, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ட்விட்டரில் கூறுகையில், "மகாத்மா காந்தி தனது வாழ்க்கையில் அன்பு, ஒருமைப்பாடு, அமைதியைப் போதித்தார், பரப்பினார். இம்ரான் கான் ஐ.நா.வில் பேசும்போதும், மிரட்டும் தொனியிலும், வெறுப்பைப் பரப்பும் வகையிலும் பேசியுள்ளார்.
வளர்ச்சி, மேம்பாடு, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, தீவிரவாதத்தை ஒழித்தல் போன்றவற்றை செய்யக்கூடிய, பேசக்கூடிய பிரதமர் பாகிஸ்தானுக்கு அவசியம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கூறுகையில், " ஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசும்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படும் என்று பேசியிருந்தார்.
மிகப்பெரிய, நட்சத்திர விளையாட்டு வீரரான இம்ரான் கான் பேசும்போது ரத்தக் களறி என்ற வார்த்தையையும், சாகும் வரை போரிடுவோம் என்ற சொல்லாடலும் பயன்படுத்தியிருப்பது இந்தியா, பாகிஸ்தான் இடையே வெறுப்பைத்தான் மேலும் அதிகரிக்கச் செய்யும். நானும் அவரைப் போன்ற விளையாட்டு வீரர் என்ற முறையில், வெறுப்பைப் பரப்பாமல், அன்பை ஊக்குவிப்பார் என எதிர்பார்க்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஐஏஎன்எஸ்