Published : 02 Oct 2019 04:44 PM
Last Updated : 02 Oct 2019 04:44 PM

கனவு நிறைவேறியது; ஆனாலும் மகிழ்ச்சியில்லை: தெ. ஆப்பிரிக்க அணியின் தமிழக வீரர் முத்துசாமி நெகிழ்ச்சி- யார் இவர்?

விசாகப்பட்டினம்

தென் ஆப்பிரிக்க அணிக்காக விளையாட வேண்டும் எனும் என்னுடைய கனவு நிறைவேறிவிட்டாலும், பூர்வீக இந்தியாவுக்கு எதிராக நான் முதன்முதலில் களமிறங்கியது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் சீனுரான் முத்துசாமி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. முதல் நாளில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் சேர்த்துள்ளது.

இதில் தென் ஆப்பிரிக்க அணியில் தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்தியர் சீனுரான் முத்துசாமி என்ற வீரர் இடம் பெற்றுள்ளார். இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான முத்துசாமி தென் ஆப்பிரிக்க ஏ அணியில் இடம் பெற்று தற்போது தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற்றுள்ளார்.

சென்னையைப் பூர்வீகமாகக் கொண்டாலும், நாகப்பட்டினத்தில்லாதான் முத்துசாமி குடும்பத்தினர், உறவினர்கள் இன்னமும் வசிக்கின்றனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் முத்துசாமி பெற்றோர் குடியேறிவிட்டனர்.

இந்திய மண்ணை விட்டுச் சென்றாலும், தமிழகத்தை விட்டுப் பிரிந்தாலும் முத்துசாமி தனது தாய் மொழி தமிழில் நன்கு பேசக்கூடியவர். தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் இன்னும் தமிழில்தான் பேசுகின்றனர்.

போட்டி தொடங்கும் முன் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

''என்னுடைய பூர்வீகம் சென்னைதான். ஆனால் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரும் நாகப்பட்டினத்தில் இருக்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய குடும்பத்தினர் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு குடிபெயர்ந்துவிட்டார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் பிறந்தாலும், இன்னும் நான் தமிழரைப் போன்றுதான் இருக்கிறேன், பேசுகிறேன். இந்தியா வந்தவுடன் என் தாய் வீட்டுக்கு வந்த நினைவு வருகிறது. இன்னும் இந்தியக் கலாச்சாரம், தமிழ் பாரம்பரியம் ஆகியவை எங்களை விட்டு அகலவில்லை.

தென் ஆப்பிரிக்க அணியில் இடம் பெற வேண்டும் என்பதற்காக என்னுடைய பெற்றோர் எனக்குத் தீவிரமாகத் தயார் செய்தார்கள். என்னுடைய கனவும் நிறைவேறிவிட்டது. ஆனால், என்னுடைய பூர்வீக நாடான இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடுவது மகிழ்ச்சியாக இல்லை.

தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் ஏராளமான இந்தியக் குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு நான் யோகா செய்வேன், அங்குள்ள தமிழ்க் கோயில்களுக்குத் தொடர்ந்து சென்று வருகிறேன். இன்னும் எனது குடும்பத்திலும், உறவினர்கள் மத்தியிலும் தமிழ்தான் பேசுகிறோம். ஆனால், நான் தாமதமாகத்தான் தமிழ் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன்" எனத் தெரிவித்துள்ளார்.

முதல் தரக் கிரிக்கெட்டில் ஆல்ரவுண்டரான முத்துசாமி 3,403 ரன்களும், 129 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

முத்துசாமி போன்று மற்றொரு இந்திய வீரரும் தென் ஆப்பிரி்க்க அணியில் இடம் பெற்றுள்ளார். அவர் கேசவ் மகராஜ். இவரும் சுழற்பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.


பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x