கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து கபில் தேவ் ராஜினாமா: ரவிசாஸ்திரி பதவிக்கு ஆபத்தா?

கபில் தேவ் : படம் ட்விட்டர்
கபில் தேவ் : படம் ட்விட்டர்
Updated on
1 min read

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (சிஏசி) தலைவர் பதவியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ராஜினாமா செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே சிஏசி குழுவில் உறுப்பினர் பதவியை முன்னாள் இந்திய மகளிர் அணியின் கேப்டன் சாந்தா ரங்கசாமி ராஜினாமா செய்த நிலையில் கபில் தேவும் ராஜினமா செய்துள்ளார்.

ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகித்ததாக, பிசிசிஐ அமைப்பின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் அனுப்பிய நோட்டீஸையடுத்து இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதுகுறித்து பிசிசிஐ அமைப்பின் முக்கிய அதிகாரி ஒருவர் கூறுகையில், " ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிப்பதாக பிசிசிஐ குறைதீர்ப்பு அதிகாரி அளித்த நோட்டீஸ் அடிப்படையில் கபில் தேவ் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ நியமித்துள்ள சிஏசி குழுவில் கபில் தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தக் குழுதான் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியைத் தேர்வு செய்தது. மகளிர் அணி பயிற்சியாளர் டபிள்யு வி ராமனை நியமித்தது.

ஆனால், சாந்தா ரங்க சாமி இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் (ஐசிஏ) இயக்குநராகவும் இருந்தார்.

இந்நிலையில் சிஏசி குழுவில் இருக்கும் 3 பேரும் இரட்டை ஆதாயப் பதவிகளில் இருப்பதாக மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயினிடம் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரையடுத்து, சாந்தா ரங்கசாமி கடந்த சில நாட்களுக்கு முன் தனது பதவியை ராஜினமா செய்தார்.

அதேசமயம், முன்னாள் வீரர் கபில் தேவ் பிசிசிஐ வாரிய உறுப்பினராகவும், சிஏசி தலைவராகவும், மைதான மின்விளக்குப் பிரிவு தலைவராகவும் இருந்து வந்தார். இது தொடர்பாக இரட்டை ஆதாயப் பதவி நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் தனது சிஏசி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இப்போது பிரச்சினை என்னவென்றால், சிஏசி குழுவில் தலைவர் உள்ளிட்ட 3 உறுப்பினர்கள் நியமனமும் செல்லாது என அறிவிக்கப்பட்டால், அவர்கள் நியமித்த நியமனமும் செல்லாததாக அறிவிக்கப்படும் அந்த வகையில், இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ரவி சாஸ்திரி, மகளிர் அணியின் பயிற்சியாளராக டபிள்யு ராமன் ஆகியோரின் பதவிக்கு ஆபத்து ஏற்படும் எனத் தெரிகிறது.

ஐஏஎன்எஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in