

விசாகப்பட்டிணம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சச்சின், லாரா சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முறியடிப்பதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. விசாகப்பட்டிணத்தில் முதல் டெஸ்ட் போட்டி நாளை நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கில் சூப்பர் ஃபார்மில் இருந்து வருகிறார். அதிலும் உள்நாட்டில் நடக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் விராட் கோலியின் அசைக்க முடியாத பேட்டிங் ஃபார்ம் பளிச்சிடும்.
இந்த தொடரில் சச்சின், லாரா சாதனையை கோலி முறியடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. தற்போது விராட் கோலி, டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளிலும் சேர்த்து 21 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 281 ரன்கள்தான் தேவைப்படுகிறது.
ஒருவேளை 21 ஆயிரம் ரன்களை இந்த டெஸ்ட் தொடரில் கோலி அடைந்துவிட்டால், இந்த சாதனையைச் செய்த மூன்றாவதுவீரர் எனும் பெருமையையும், லாரா, சச்சினின் சாதனையை முறியடித்தார் என்ற பெருமையும் கிடைக்கும்.
ஏனென்றால், சச்சின் தனது 21 ஆயிரம் ரன்களை 473 இன்னிங்ஸ்களில்தான் நிறைவு செய்தார், மேற்கிந்தியத்தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா 485 இன்னிங்ஸ்களில்தான் தனது 21 ஆயிரம் ரன்களை எட்டினார்.
ஆனால், இருவரின் இன்னிங்ஸை அடைவதற்கு கோலிக்கு இன்னும் 41 இன்னிங்ஸ் இருக்கிறது. அதாவது 41 இன்னிங்ஸ்களில் கோலி 281 ரன்களில் அடித்தாலோ அல்லது 3 டெஸ்ட் தொடர்களில் அடித்தாலோ சச்சின், லாராவைக் காட்டிலும் குறைந்த இன்னிங்ஸ்களில் வேகமாக 21 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விராட் கோலி இதுவரை 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 758 ரன்கள் சேர்த்துள்ளார். சராசரியாக 47.37 ரன்களை கோலி சேர்த்துள்ளார், இதில் 2 சதம், 3 அரைசதங்கள் அடங்கும்.
புதிய சாதனை
அதுமட்டுமல்லாமல் சொந்தநாட்டில் அதிகமான வெற்றிகளை பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன்கள் ஸ்டீவ் வாஹ், மார்க் டெய்லர், ரிக்கி பாண்டிங் உள்ளனர். ஸ்டீவ் வாஹ், மார்க் டெய்லர் ஆகியோர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 1994 முதல் 2000ம் ஆண்டுவரை உள்நாட்டில் தொடர்ந்து 10 தொடர்களில் வென்றது.
ரிக்கிபாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2004 ஜூலை முதல் 2008 நவம்பர் வரை தொடர்ந்து 10 டெஸ்ட் தொடர்களில் வெற்றிகளைக் குவித்தது. இப்போது இவர்கள் வரிசையில் விராட் கோலியும் 10 டெஸ்ட் தொடர் வெற்றிகளை உள்நாட்டில் பெற்று சமன் செய்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை விராட் கோலி வென்றால், உள்நாட்டில் அதிகமான டெஸ்ட் தொடர் வெற்றிகளை பெற்றுக் கொடுத்த இந்தியக் கேப்டன் எனும் பெருமையை கோலி பெறுவார்.
கடைசியாக கடந்த 2012-13-ம் ஆண்டு உள்நாட்டில் இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. அதன்பின் ஒரு தொடரையும் இழக்காமல் வெற்றி நடையுடன் செல்கிறது குறிப்பிடத்தக்கது.