

மும்பை
அடுத்த உலகக்கோப்பை போட்டியில் எம்எஸ் தோனி விளையாடுவார் என நான் நினைக்கவில்லை. அவரைத் தவிர்த்துவிட்டு இளம் வீரருக்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்கலாம் என்று முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், ஆங்கில நாளேடு ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
''தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று என்னைக் கேட்டால், ஒவ்வொரு வீரரின் ஓய்வு என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். உங்களால் விளையாடிய முடிந்த அளவுக்கு, அதாவது உடல் ஒத்துழைக்கும் அளவுக்கு விளையாட முடிந்த அளவுக்கு விளையாடலாம். அதேசமயம், எதிர்கால வாழ்க்கையையும் பார்க்க வேண்டும்.
தோனியைப் பொறுத்தவரை அவரின் ஓய்வை அவரிடமே விட்டுவிட வேண்டும். ஆனால், 2023-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிவரை தோனி விளையாடுவார் என நான் நினைக்கவில்லை.
தோனிக்கு வாய்ப்பு அளிப்பதற்குப் பதிலாக இளம் வீரர்கள் ரிஷப் பந்த், சஞ்சு சாம்ஸன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கி வளர்க்கலாம். தனிப்பட்ட முறையில் இனிவரும் போட்டிகளில் தோனியைத் தவிர்த்துவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிப்பதே சிறந்தது".
இவ்வாறு கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா ’தி இந்து’விடம் (ஆங்கிலம்) கூறுகையில், " தோனியின் ஓய்வு குறித்து அவர்தான் முடிவு எடுக்க வேண்டும். இன்னும் உடல் தகுதியுடன் தோனி இருக்கிறார். மிகச்சிறந்த விக்கெட் கீப்பர், அருமையான ஃபினிஷர். டி20 உலகக்கோப்பை போட்டிக்கு தோனி இந்திய அணியின் சொத்தாகத் திகழ்வார்" எனத் தெரிவித்துள்ளார்.