

விஜயநகரம்
இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களுக்கு பர்ஸ்ட் பஞ்ச்(குத்து விடுவதை) தென் ஆப்பிரிக்க அணியின் மூத்த வீரர்கள்தான் கொடுக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் வெர்னன் பிலாண்டர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 2-ம் தேதி தொடங்குகிறது. முன்னதாக நடந்த டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க, இந்திய அணி சமன் செய்தன.
கடந்த முறை இந்தியா வந்திருந்தபோது தென் ஆப்பிரிக்க அணியில் இருந்த ஹசிம் அம்லா, ஸ்டெயின் ஆகியோர் இந்த முறை இல்லை. இளம் வீரர்களைக் கொண்ட அணியாக களமிறங்குகிறது. ஐசிசியின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த டெஸ்ட் தொடர் வருவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெஸ் போட்டியில் தங்களின் ஆட்டம் குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர் நிருபரிடம் கூறியது:
இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் விளையாடும் இந்த டெஸ்ட் தொடர் மிகக் கடினமானதாக எங்களுக்கு இருக்கும். இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்களை எதிர்கொள்வதற்கு வேறு ஏதும் வழி இருக்கிறதா என்று எங்கள் வீரர்கள் தேடுவார்கள் என்றெல்லாம் நான் நினைக்கவில்லை
இந்த சவாலுக்கு அனைவரும் தயாராகி வருகிறோம், ஏராளமான வீரர்களுக்கு இடையே போட்டி இருக்கிறது. மிகப்பெரிய நட்சத்திர வீரர்கள் விடும் அறிக்கைகள் முக்கியமாக பார்க்கப்படும். எங்களுடைய பணி என்பது இங்கு வந்து இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்கள் முகத்தில் குத்துவிடுவதுதான், எதிர்பார்த்தது போலவே சிறப்பாக விளையாடுவோம். இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு குத்துவிடும் பணியை எங்கள் அணியின் மூத்த வீரர்கள் செய்யவேண்டும்.
ஒரு அணியாக எங்களுக்கு யாரெல்லாம் மெதுவாக ஆட்டத்தைத் தொடங்குவார்கள் என்பது தெரியும். நாங்கள் சிறப்பாகவே விளையாடி இருக்கிறோம். இது சர்வதேச போட்டி என்பதால், ஏராளமான அழுத்தம் இருக்கும். நாம் சிறப்பாக விளையாடுவதை விட்டுவிடக் கூடாது.
இந்த முறை நாங்கள் சில மூத்த வீரர்களை இழந்துவிட்டோம், அதேசமயம் புதிய வீரர்கள் வந்திருக்கிறார்கள், விரைவாக கற்றுக்கொள்வார்கள் என நம்புகிறோம். மூத்த வீரர்களின் அனுபவம் எங்களுக்கு இன்னும் இருக்கிறது. அதுதான் முக்கியமானது, வலுவான அடித்தளம் உருவாக்கிக் கொடுக்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி புதிய பரிமாணத்தை ஏற்படுத்தி இருக்கிறது,வீரர்களுக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்தியா போன்ற முன்னணி அணியுடன் விளையாடுவது உற்சாகமாக இருக்கும். சிறப்பாக தயாராகி இருக்கிறோம். நன்றாக விளையாடும்போது, நம்பிக்கை கிடைக்கும், அந்த நம்பிக்கையை எங்களுடன் வைத்து அடுத்த கட்டத்துக்கு நகர்வோம்
இவ்வாறு பிலாண்டர் தெரிவித்தார்
பிடிஐ