

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி யின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள முகுருஸா 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 13-வது இடத்தில் இருந்த போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்காவை தோற்கடித்தார்.
இதன்மூலம் கடந்த 19 ஆண்டுகளில் விம்பிள்டன் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார் முகுருஸா. இதற்கு முன்னர் 1996-ல் ஸ்பெயினின் அரங்ஸ்டா சான்செஸ் விம்பிள்டனில் இறுதிச்சுற்று வரை முன்னேறியுள்ளார்.
21 வயதான முகுருஸா தனது இறுதிச்சுற்றில் செரீனா வில்லியம்ஸ் அல்லது மரியா ஷரபோவாவை சந்திக்கவுள்ளார். அதில் முகுருஸா வெற்றி பெறும்பட்சத்தில் கடந்த 21 ஆண்டுகளில் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார். இதற்கு முன்னர் 1994-ல் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் ஸ்பெயி னின் கான்சிடா மார்ட்டினிஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
போபண்ணா ஜோடி தோல்வி
ஆடவர் இரட்டையர் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள நெதர்லாந்தின் ஜீன் ஜூலியர் ரோஜர்-ருமேனியாவின் ஹாரியா டீக்கா ஜோடி 4-6, 6-2, 6-3, 4-6, 13-11 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்த இந்தியாவின் ரோஹன் போபண்ணா-ருமேனியாவின் புளோரின் மெர்ஜியா ஜோடியைத் தோற்கடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. இந்த ஆட்டம் 3 மணி நேரம், 22 நிமிடங்கள் நடந்தது.
அரையிறுதியில் சானியா ஜோடி
மகளிர் இரட்டையர் காலிறுதி யில் இந்தியாவின் சானியா மிர்சா-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் கேஸி டெல்லக்கா-கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஸ்வேடோவா ஜோடியைத் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது.
போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சானியா-மார்ட்டினா ஜோடி தங்களின் அரையிறுதியில் அமெரிக்காவின் ராகேல் கோப்ஸ்-அபிகெய்ஸ் ஸ்பியர்ஸ் ஜோடியை சந்திக்கிறது.