

புதுடெல்லி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி மாதிரி அல்ல, விராட் கோலி துணிச்சலானவர், தைரியமான முடிவுகளை எடுக்கக் கூடியவர் என்று முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் அடுத்த மாத தொடக்கத்தில் தொடங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கீழ் வருவதாலும், இந்தியாவில் நடப்பதாலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகீர் கான் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு குறித்து பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:
இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளராக இப்போது இருப்பது மிகவும் உற்சாகம் தரக்கூடியதாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் தருணம். ஏனென்றால், பும்ரா, முகமது ஷமி, இசாந்த் சர்மா ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசுவதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதேபோல புவனேஷ்வர் குமார், இசாந்த் சர்மா, பும்ரா, நவ்தீப் சைனி போன்ற பந்துவீச்சாளர்கள் தங்களின் திறமையை தொடர்ந்து நிரூபித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போதுள்ள இந்திய அணி பந்துவீச்சில் ராட்சத திறனை கொண்டிருக்கிறது, உலகின் எந்த அணிக்கும் சவாலாகத் திகழும். இந்த வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து கடினமாக உழைத்து, தங்களின் திறன் குறையாமல் பார்த்துக்கொண்டால் நல்லவிதமான முடிவுகளைப் பெறலாம்.
சவுரவ் கங்குலி வெளிநாடுகளில் தன்னுடைய தலைமையில் மட்டுமே அதிகமான வெற்றிகளை பெற முடியும் என்று நம்பினார், ஆவேசத்துடன் விளையாடுவதை பழக்கமாக வைத்திருந்தார். ஆனால், தோனி அமைதியாக இருந்து கடினமான முடிவுகளை எடுத்தார், ஆனால், அனுகுமுறையில் ஆவேசம் இருக்கும். தோனியின் தலைமையில்தான் இந்திய அணி 2 உலகக் கோப்பையை வென்றுள்ளது.
ஆனால் கங்குலியைப் போன்று விராட் கோலி அல்ல. தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துபவர், முடிவுகளை துணிச்சலாக எடுப்பவர், அவரின் பேட்டிங் நிச்சயம் அணியின் வெற்றியில் பிரதிபலித்து, அணியை வழிநடத்தும். நிச்சயம் ஒருநாள் விராட் கோலி தலைமையில் இந்திய அணி கோப்பையை வெல்லும்.
இவ்வாறு ஜாகீர் கான் தெரிவித்துள்ளார்
, ஐஏஎன்எஸ்