Published : 28 Sep 2019 04:31 PM
Last Updated : 28 Sep 2019 04:31 PM

இந்திய அணி வெற்றிக்கு சரியான முடிவு எடுத்த தோனிக்கு வாழ்க்கையை பற்றி முடிவெடுக்கதெரியாதா: ஷிகர் தவண் பேட்டி 

புதுடெல்லி

கிரிக்கெட்டில் ஏராளமான முக்கியமான முடிவுகளை தோனி எடுத்துள்ளார், ஆதலால், அவரின் எதிர்கால வாழ்க்கை குறித்தும், ஓய்வு குறித்தும் சரியான நேரத்தில் தோனி முடிவெடுப்பார் என்று ஷிகர் தவண் தெரிவித்தார்.

உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக இருந்தே தோனியின் பேட்டிங் ஃபார்மில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்தன. அவரின் ஆட்டத்தில் துடிப்பில்லை, சூழலுக்கு தகுந்தார்போல் பேட் செய்வதில்லை என்ற காட்டமான வார்தைகள் எழுந்தன. முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், மஞ்சுரேக்கர், சேவாக் ஆகியோரும் தோனியின் பேட்டிங் செய்யும் விதத்தைமாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் தோனியின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துஅணிகளுக்கு எதிராக தோனியின் பேட்டிங் ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளியது. இதனால், உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார்.

ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரீசிலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவில்லை.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தபின் வங்கதேசம் அணி இந்தியா வந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கு தோனியின் பெயர் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனார்.

இந்நிலையில் நவம்பர் மாதம் வரை தன்னை அணியில் பரீசீலிக்க வேண்டாம் என்று தோனி தரப்பி்ல தேர்வுக்குழுவினரை கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தோனியின் ஓய்வு குறித்த பேச்சும் எழுந்து வருகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், " தோனியின் தலைமையில்தான் நான் அறிமுகமானேன். ஒவ்வொரு வீரரின் பலம், பலவீனம் எது தோனிக்கு நன்கு தெரியும். அவரின் எதிர்காலம் குறித்து தோனி சரியான நேரத்தில் முடிவு எடுப்பார்.

நீண்டகாலமாக தோனி விளையாடி வருகிறார், அவருக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று புரிந்திருக்கும் என்று நான் உணர்கிறேன். ஓய்வு அறிவிப்பது என்பது தோனியின் முடிவு. இந்திய அணியின் முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தில் அவர் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார், ஆதலால், சரியான நேரம் வரும் போது தோனி நல்ல முடிவை எடுப்பார்.
இதுதான் மிகப்பெரிய தலைவரின் தகுதியாகும். ஒவ்வொரு வீரரின் தனித்திறமையை நன்கு அறிந்து வைத்த தோனி, எந்த வீரருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்தவர். எவ்வாறு போட்டியில் சாம்பியன் ஆக வேண்டும் என்பதையும் தோனி அறிந்தவர். தோனியின் கட்டுப்பாடு அவரின் சிறந்த தனித்திறமையாகும்.

தற்போதுள்ள கேப்டன் விராட் கோலியும், தோனி மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்தவர் தோனி. நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளோம், அதிகமான மரியாதையும் வைத்துள்ளோம்.

தோனிக்கும், கோலிக்கும் இடையிலான நட்பு வலிமையானது. விராட் கோலி சிறுவயதில் அணிக்குள் வந்தபோது அவரை வழிநடத்தியது தோனிதான். கேப்டனாக கோலி வந்தபின்பும் அவரை வழிகாட்டிச் சென்றது தோனிதான். இதுதான் ஒரு தலைவனின் தகுதி, தோனியிடம் கோலி எப்போதும் நன்றியுனர்வுடன் இருப்பார்" எனத் தெரிவித்தார்

, ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x