இந்திய அணியின் 4ம் நிலை பிரச்சினையை நான் தீர்க்க முடியும்: டி20 உ.கோப்பை வாய்ப்பை எதிர்நோக்கும் ரெய்னா

இந்திய அணியின் 4ம் நிலை பிரச்சினையை நான் தீர்க்க முடியும்: டி20 உ.கோப்பை வாய்ப்பை எதிர்நோக்கும் ரெய்னா

Published on

சென்னை,

முழங்கால் அறுவை சிகிச்சையிலிருந்து மீண்டு வந்துள்ள சுரேஷ் ரெய்னாவுக்கு வயது 32. இன்னும் 3-4 ஆண்டுகள் கிரிக்கெட் அவரிடம் உள்ளது. இந்நிலையில் 20120-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக்கோப்பையை குறிவைத்துள்ளார் சுரேஷ் ரெய்னா.

சென்னையில் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழக தொழில்நுட்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரெய்னா தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இந்திய அணியின் 4ம் நிலை பேட்டிங் இடத்துக்கு தான் சரியான வீரராக இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

5,615 ஒருநாள் போட்டி ரன்களும், 1,605 டி20 சர்வதேச போட்டி ரன்களையும் தன் வசம் வைத்துள்ள சுரேஷ் ரெய்னா தன் அதிரடி ஆட்டம் மூலம் நடுவரிசையில் பலவெற்றிகளைப் பெற்றுத் தந்துள்ளார், தோனியுடன் இவர் ஆடிய இன்னிங்ஸ்கள் மறக்க முடியாதவை. இந்நிலையில் வரும் நவம்பரில் ஆடத் தொடங்கும் ரெய்னா 20120, 2021 டி20 உலகக்கோப்பையை குறிவைத்து ஆடவிருப்பதாக தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

நான் 4-ம் இடத்திற்கு பொருத்தமானவன், என்னால் அந்த நிலையில் ஆட முடியும், ஏற்கெனவே ஆடியிருக்கிறேன். ஆகவே டி20 உலகக்கோப்பைகள் வருவதால் இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்குகிறேன்.

ரிஷப் பந்த், தோனி பற்றி..

ரிஷப் பந்த் குழப்பத்தில் இருக்கிறார், அவர் தன் இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை. சிங்கிள்கள் எடுக்கப் பார்க்கிறார், தடுத்தாடுகிறார், ஆட்டத்தை தொலைத்தவர் போல் இருக்கிறார்.

தோனி இப்படிப்பட்ட நிலையில் வீரரிடம் பேசுவார், அதே போல் ரிஷப் பந்த்திடம் யாராவது பேச வேண்டும். கிரிக்கெட் மனநிலை சார்ந்த ஆட்டம், எனவே பந்த்தின் ஆக்ரோஷ ஆட்டத்தை ஊக்கப்படுத்தி அவரை ஆதரிக்க வேண்டும். இப்போதைக்கு அவர் தனக்கு அறிவுறுத்தப்படும் விதத்தில் ஆடுகிறார், இது சரிப்பட்டு வராது.

அம்பாத்தி ராயுடுவுக்காக வருந்துகிறேன், 2 ஆண்டுகள் அவர் உலகக்கோப்பைக்காகத் தயார்படுத்தப்பட்டு திடீரென நீக்கப்பட்டால் யாருக்குமே ஏமாற்றம் ஏற்படும்.

தோனியைப் பொறுத்தவரை இன்னமும் உடல்தகுதியுடன் இருக்கிறார், பிரமாதமாக கீப் செய்கிறார், கிரேட்டஸ்ட் பினிஷர், ஆகவே டி20 உலகக்கோப்பையில் அவர் இந்திய அணியின் சொத்தாகத் திகழ்வார்.

இவ்வாறு கூறினார் ரெய்னா.

-எஸ்.தினகர், தி இந்து ஆங்கிலம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in