

ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து சமீபத்தில் விடுவிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார் என கொச்சி பெரு நகர குழுமம் (ஜிடிசிஏ) அறிவித்துள்ளது.
ஸ்ரீசாந்தை நீதிமன்றம் விடுவித்தாலும், அவர் மீதான தடையை நீக்க பிசிசிஐ தயாராக இல்லாத நிலையில் ஜிடிசிஏ தலைவர் வேணுகோபால் கூறியதாவது:
நேரு மைதானத்தில் வலைப் பயிற்சி பெறுவதற்கு ஸ்ரீசாந்த் எங்களிடம் அனுமதி கோரும்பட்சத்தில் நிச்சயம் நாங்கள் அவரை அனுமதிப்போம். ஏனெனில் அவர் கேரளத்தைச் சேர்ந்தவர். இந்திய கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் பங்களிப்பு செய்துள்ளார். மைதானத்துக்கு நாங்கள்தான் உரிமையாளர். மைதானத்தில் யாரை அனுமதிப்பது, யாருக்கு அனுமதி மறுப்பது என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம்” என்றார்.
கொச்சி கலூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானம் கொச்சி பெரு நகர குழுமத்துக்கு சொந்தமானதாகும். இந்த மைதானம் கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு 30 ஆண்டுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட மறு நாளே கொச்சியில் உள்ள ஒரு பள்ளியில் ஸ்ரீசாந்த் பயிற்சியைத் தொடங்கிவிட்டது குறிப்பிடத் தக்கது.
ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வாழ்நாள் தடை விதித்துள்ளது. அந்த தடை நீக்கப்படும்பட்சத்தில் அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு திரும்ப வாய்ப்பு ஏற்படும்.