லண்டன் பாரா ஜூடோ காமன்வெல்த் போட்டியில் சேலம் கல்லூரி மாணவி தங்கம் வென்று சாதனை

லண்டன் பாரா ஜூடோ காமன்வெல்த் போட்டியில் சேலம் கல்லூரி மாணவி தங்கம் வென்று சாதனை
Updated on
1 min read

சேலம்

லண்டனில் நடைபெற்று வரும் பாரா ஜூடோ காமன்வெல்த் போட்டியில் சேலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறன் மாணவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த செட்டிமாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமி, அம்மாசி தம்பதியின் மகள் பி.சுபாஷினி (19). கூலி வேலை செய்து வரும் இவர்களின் 2-வது மகள் சுபாஷினி. பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளியான இவர் சேலத்தை அடுத்த அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள பார்வையற்றோர் அரசு விடுதியில் தங்கி, சேலம் ஸ்ரீசக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் பிஏ (வரலாறு) இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவர் 8-ம் வகுப்பு முதலே ஜூடோ பயின்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வந்தார். அவருக்கு சேலத்தைச் சேர்ந்த மகேஸ்வரன், உஷா தம்பதி பயிற்சியாளராக இருந்து வருகின்றனர். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து தேசிய போட்டிகளில் பங்கேற்ற இவர் 4 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில், லண்டனில் நடந்த பாரா ஜூடோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க இந்திய அணியில் பி.சுபாஷினி தேர்வானார். இதையடுத்து, இவர் போட்டியில் பங்கேற்க அவர் பயிலும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் நிதியுதவி செய்திருந்தனர். மேலும், தமிழக முதல்வர் பழனிசாமி, ரூ.1.35 லட்சம் நிதியுதவி அளித்தார்.

இதையடுத்து, அரசு பயிற்சியாளர் உமா சங்கர் தலைமையில் தமிழகத்தில் இருந்து பி.சுபாஷினி உள்ளிட்ட மேலும் இரு மாணவர்கள் லண்டனில் நடைபெற்று வரும் பாரா ஜூடோ காமன்வெல்த் போட்டியில் பங்கேற்றனர். இதில், 44 கிலோ எடை பிரிவில் நேற்று (26-ம் தேதி) பங்கேற்ற மாணவி பி.சுபாஷினி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற மாணவியை பயிற்சியாளர்கள், கல்லூரி நிர்வாகம் மற்றும் சக மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுபாஷினியின் உடன் பிறந்த சகோதரி மற்றும் சகோதரரும் பார்வைத்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள். இதில், பி.சுபாஷினியின் சகோதரர் தற்போது ஜூடோ பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in