Published : 25 Sep 2019 07:50 PM
Last Updated : 25 Sep 2019 07:50 PM

சத்தம் போடுவதும், அடக்குவதும் ரிஷப் பந்த்திற்கு உதவுவது ஆகாது: யுவராஜ் சிங் காட்டம்

கடும் அழுத்தம் கொடுக்கப்படும் ரிஷப் பந்த்திடமிருந்து சிறந்த திறமையை வெளிக்கொண்டு வருவது எப்படி என்பது குறித்து யுவாராஜ் சிங் ஆலோசனை வழங்கியுள்ளார்.

என்.டி.டிவிக்கு அவர் கூறியதாவது:

யாராவது ரிஷப் பந்த்தின் திறமைகளை வெளிக்கொணர வேண்டும், அவரிடமிருந்து சிறப்பானவற்றைக் கொண்டு வருவது என்பது ரிஷப் பந்த்தின் குணாம்சத்தைப் புரிந்து கொண்டால்தான் முடியும்.

அவரது குணநலன்களையும், அவரது மனோவியலையும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவரைச் சத்தம் போடுவதோ, அடக்குவதோ எந்த விதத்திலும் ரிஷப் பந்த்திற்கு உதவுவது ஆகாது.

சரி, அவருக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன, ஆனால் பயிற்சியாளர்கள், கேப்டன் ஆகியோர்தான் அவரிடமிருந்து சிறந்த ஆட்டத்தை வெளிக்கொணர உதவ ஆனால் துரதிர்ஷ்டவசமாக எனக்குக் கூறுபவர்கள் யாரும் இல்லை.

தற்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் இளம் வீரர்களுக்கு நிறைய பணம் கிடைக்கிறது. ஆகவே அவர்களுக்கு அவர்களது முன்னுரிமை என்ன என்பதை யாராவது எடுத்துக் கூற வேண்டும்.

எனவே பேச வேண்டும், பேசி சிறந்தவற்றை வெளிக்கொண்டு வரவேண்டுமே தவிர, சத்தம் போடுவது, அடக்கி ஒடுக்குவது ஒரு போதும் உதவப்போவதில்லை. இந்த இளம் வயதில் அயல்நாட்டில் 2 டெஸ்ட் சதங்களை பந்த் எடுத்துள்ளார். எனவே திறமை மிக்கவர்தான் அதில் சந்தேகமில்லை, அவரிடமிருந்து எப்படி பெற வேண்டும் என்பதை மேலே உள்ளவர்கள்தான் உணர வேண்டும்.

என்றார் யுவராஜ் சிங். இதே கருத்தைத்தான் கம்பீரும் கூறினார், அதாவது விக்ரம் ராத்தோர் போன்றவர்கள், ‘பயமற்ற கிரிக்கெட்டுக்கும் அலட்சியமாக ஆடுவதற்கும் இடையே மெல்லிய கோடுதான் உள்ளது என்கிறார், நிர்வாகத்தில் உள்ள ஒருவர் இளம் வீரர் மனதை இப்படிப் புண்படுத்தலாமா? இதனால் தன்னைத் தக்கவைக்க ரிஷப் பந்த் ஆடநேரிட்டுள்ளது, இதனால் அவரால் ரன்கள் அடிக்க முடியவில்லை’ என்று கூறிய கம்பீர், அவர் தோள் மீது அரவணைப்பாக கைகளைப் போட்டு அவர் அணிக்கு தேவை என்பதைக் கூற வேண்டும் என்றார்.

இளம் வீரரை மிரட்டும் இத்தகைய கேப்டன், பயிற்சியாளர், ரோஹித் சர்மா சொதப்பியதற்கு அவருக்கு டெஸ்ட் தொடக்க வீரராக ப்ரமோஷன் கொடுத்துள்ளனர். ”தோனி நீக்கப்பட்டுள்ளார் என்று கூற அணி நிர்வாகத்தில் ஒருவருக்கும் தைரியமில்லை” என்றே கிரிக் இன்போவின் சித்தார்த் மோங்கா தன் பத்தியில் குறிப்பிட்டதையும் யுவராஜ் சிங்கின் இந்த பேட்டியையும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x