

விஜயநகரத்தில் வியாழனன்று (நாளை, 26-9-19) இந்திய கிரிக்கெட் வாரிய அணித் தலைவர் அணிக்காக கேப்டனாக களமிறங்கும் ரோஹித் சர்மா, டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராகக் களமிறங்கி பயிற்சியாட்டத்தில் ஒத்திகை காணவிருக்கிறார்.
ரோஹித் சர்மா தன் டெஸ்ட் வாழ்க்கையை மீட்டுருவாக்கம் செய்து கொள்ள நல்ல வாய்ப்பு இது, வெற்றியடைந்தால் இந்திய அணிக்கும் அவருக்கும் நல்லது தோல்வியடைந்தால் மீண்டும் பிரிதிவி ஷா, அல்லது பிரியங்க் பஞ்சால், அல்லது அபிமன்யு ஈஸ்வரன் அல்லது ஷுப்மன் கில் அப்படி இல்லையெனில் ராகுல் என்று தொடக்க வீரர் பட்டாளமே இங்கு கைவசம் உள்ளது.
ஜஸ்பிரித் பும்ராவுக்குப் பதில் இடம்பெற்றுள்ள உமேஷ் யாதவ், தன் திறமைகளை டுபிளெசிஸ், மார்க்ரம் ஆகியோருக்கு எதிராக நிரூபிக்க வேண்டியுள்ளது. இருப்பினும் தற்போது கவனம் முழுதும் ரோஹித் சர்மாவின் புதிய தொடக்க வீரர் என்ற பங்காற்றலில் மட்டுமே உள்ளது.
27 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவின் சராசரி 39.62. இதில் 3 சதங்கள் அடங்கும், ஆனால் இவரது திறமைக்கு டெஸ்ட் போட்டிகளிலும் சாதித்திருக்க வேண்டும். ஆனால் அவரது பேட்டிங் உத்தி மற்றும் ஐபிஎல் போன்ற தரமற்ற கிரிக்கெட் போட்டிகளில் அதிகம் விளையாடியது ஆகியவை அவரது டெஸ்ட் வாழ்க்கையை வீணடித்தது.
கிரேம் ஹிக் என்ற இங்கிலாந்து வீரர் முதல் தர கிரிக்கெட்டில் 100 சதங்கள் கண்டவர், ஆனால் டெஸ்ட் அரங்கில் தோல்வியடைந்தார், காரணம், மிக அதிகமாக தரமற்ற கிரிக்க்கெட் போட்டிகளில் ஆடியதே என்றார் இயன் சாப்பல்.
எனவே வாரியத்தலைவர் அணிக்காக தென் ஆப்பிரிக்காவின் சிறந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியான ரபாடா, பிலாண்டர், லுங்கி இங்கிடி, நோர்ட்யே ஆகியோரை ரோஹித் சர்மா எதிர்கொண்டு டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தன் வரவை அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
இந்தியப் பிட்ச்களில் ரோஹித் சர்மா வெற்றியடையலாம் ஆனால் அதை அயல்நாட்டுப் பிட்ச்களில் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல, அடுத்த அயல்நாட்டுத் தொடர் நியூஸிலாந்தில் என்பதால் அங்கு ட்ரெண்ட் போல்ட், ரோஹித் சர்மாவுக்கு டெஸ்ட் வாழ்க்கையை மிகக்கடினமாக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
ரோஹித் சர்மா தன்னை நிரூபிக்க அடுத்த 6 மாதகால அவகாசம் உள்ளது. சேவாக் போன்று இவர் ஆடுவது கடினம் ஏனெனில் சேவாக் தன் உத்தியில் வல்லவர். இவருக்க்கு வெளியே செல்லும் பந்துகளும் பிரச்சினை, உள்ளே வரும் பந்துகளும் சிக்கல்.
ஆகவே நாளை தொடங்கும் இந்த 3 நாள் பயிற்சி ஆட்டம் ரோஹித் சர்மாவுக்கு பயிற்சி ஆட்டம் அல்ல, சோதனை ஓட்டமாகும்.