

மும்பை
உலகக் கோப்பைப் போட்டிக்குபின் நீண்ட ஓய்வில் இருந்துவரும் முன்னாள் கேப்டன் தோனி, தனது ஓய்வை நீட்டிக்க உள்ளதாகவும் நவம்பர்மாதம்வரை அணியில் பரிசீலிக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே மேற்கிந்திய்தொடர், தென் ஆப்பிரிக்கத் தொடர் ஆகியவற்றை தவறவிட்ட தோனி, அடுத்துவரும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரையும் தவறவிடுவார் எனத் தெரிகிறது.
உலகக்கோப்பைப் போட்டிக்கு முன்பாக இருந்தே தோனியின் பேட்டிங் ஃபார்மில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்தன. அவரின் ஆட்டத்தில் துடிப்பில்லை, சூழலுக்கு தகுந்தார்போல் பேட் செய்வதில்லை என்ற காட்டமான வார்தைகள் எழுந்தன. முன்னாள் வீரர்கள் கவாஸ்கர், மஞ்சரேக்கர், சேவாக் ஆகியோரும் தோனியின் பேட்டிங் செய்யும் விதத்தைமாற்ற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
ஆனால், உலகக் கோப்பைப் போட்டியில் தோனியின் பேட்டிங்கில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆப்கானிஸ்தான், இங்கிலாந்துஅணிகளுக்கு எதிராக தோனியின் பேட்டிங் ரசிகர்களை வெறுப்பின் உச்சத்துக்கு தள்ளியது. இதனால், உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியஅணி அரையிறுதியோடு வெளியேறிய நிலையில் தோனி ஓய்வு எடுக்கத் தொடங்கினார்.
ராணுவத்தில் பயிற்சியில் ஈடுபட்ட தோனி, மேற்கிந்தியத்தீவுகள் செல்லும் இந்திய அணியில் தனது பெயரை பரீசிலிக்கவேண்டாம் என தேர்வுக்குழுவிடம் கேட்டுக்கொண்டார். அதன்பின் தென் ஆப்பிரிக்கத் தொடரிலும் தோனியின் பெயர் பரிசீலிக்கப்படவி்ல்லை.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தபின் வங்கதேசம் அணி இந்தியா வந்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. அந்த தொடருக்கு தோனியின் பெயர் நிச்சயம் பரிசீலிக்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனார்.
இந்நிலையில் நவம்பர் மாதம் வரை தன்னை அணியில் பரீசீலிக்க வேண்டாம் என்று தோனி தரப்பி்ல தேர்வுக்குழுவினரை கேட்டுக்கொண்டதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் நடைபெற உள்ள விஜய் ஹசாரே கோப்பையில் தோனி இடம் பெறாவிட்டால், வங்கதேசத்துக்கு எதிரான தொடரிலும் தோனி நிச்சயம் இடம் பெறவாய்பில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு மே.இ.தீவுகள் அணி டிசம்பர் மாதம் வந்து டி20, ஒருநாள் தொடரில்விளையாட உள்ளது. அந்த தொடரில் தோனியின் பெயர் அவரின் விருப்பத்தின் அடிப்படையில் பரிசீலிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
தோனிக்குப் பதிலாக ரிஷப் பந்துக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி நிர்வாகம் வழங்கி வருவதால், தோனி ஓய்வு குறித்த முடிவு எடுக்க உள்ளாரா என்ற பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.