

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தோற்றுப் போன பெங்களூரு டி20 போட்டியில் வீரர்கள் இறங்குவதில் குழப்பம் ஏற்பட்டதால் ஷரேயஸ் அய்யர் இறங்க வேண்டிய இடத்தில் ரிஷப் பந்த் இறங்கினார்.
அதாவது 4ம் நிலையில் உண்மையில் அய்யர்தன இறங்கியிருக்க வேண்டும், ஆனால் ரிஷப் பந்த் இறங்கிவிட்டார், இது எதனால் நிகழ்ந்தது? என்று விராட் கோலி விளக்கமளிக்கையில், “அங்கு குழப்பம் ஏற்பட்டு விட்டது. பிறகுதான் இதனை நான் புரிந்து கொண்டேன். அதாவது 10 ஒவர்களுக்குள் 2 விக்கெட்டுகள் விழுந்தால் அய்யர்தான் இறங்க வேண்டும், (8வது ஓவரில் இந்தியா 63/2 என்று இருந்தது), ஆனால் ரிஷப் பந்த் இறங்கினார். இங்கு ‘மிஸ்கம்யூனிகேஷன்’ஆகியுள்ளது.
பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் அய்யர், பந்த் இருவரிடமும் இது தொடர்பாகப் பேசினார். ஒரு கட்டத்தில் வேடிக்கையாகிப் போனது இருவருமே இறங்கப் பார்த்தார்கள். இருவரும் பிட்சிற்கு வந்திருந்தால் இன்னும் வேடிக்கையாகியிருக்கும். ஒரே நேரத்தில் பிட்ச்சில் 3 பேட்ஸ்மென்கள்.. ஆம் அது மிஸ்கம்யூனிகேஷன் தான்.
10 ஓவர்களுக்குப் பிறகாக இருந்தால் ரிஷப் பந்த் இறங்குவதாகத் திட்டம். முன்னதாக விக்கெட் விழுந்தால் அய்யர் இறங்க வேண்டும், இதில் இருவருக்குமே குழப்பம் நிலவியது” என்றார் கோலி
இதில் வேடிக்கை என்னவெனில் ரிஷப் பந்த்தும் 20 பந்துகளில் 19 என்று சொதப்ப, 8 பந்துகளில் 5 ரன்கள் என்று அய்யரும் சொதப்பினார்.
இந்த 4ம் நிலை, 5ம் நிலை குழப்பங்கள் என்றுதான் இந்த இந்திய அணியை விட்டு விலகுமோ? என்று முன்னாள் வீரர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.