Published : 23 Sep 2019 02:40 PM
Last Updated : 23 Sep 2019 02:40 PM

இலக்கை விரட்டாமல் முதலில் பேட் செய்தது ஏன்? புதிய அணுகுமுறையே காரணம்: விராட் கோலி பதில்

பெங்களூருவில் நடைபெற்ற 3வது டி20 போட்டியில் டாஸ் வென்றும் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ததால்தான் இந்திய அணி தோற்றது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் விராட் கோலி நேற்று ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியிலேயே இந்தக் கேள்விக்கு விடையளித்தார்.

இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது தவறாக இருக்கலாம் ஆனால் அணி நிர்வாகம் மற்றும் அனைவரும் சேர்ந்து பேட்டிங் அணுகுமுறை மாற்றத்துக்கான முடிவை எடுத்ததால் முதலில் பேட் செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.

அணுகுமுறை மாற்றம் பலனளிக்கவில்லை, இதனால் 134 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி மடிந்தது, தென் ஆப்பிரிக்க அணி அனுபவம் குறைந்த பந்துவீச்சை புரட்டி எடுத்து 140/1 என்று 9 விக்கெட்டுகளில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டி தொடரையும் சமன் செய்தது.

இந்நிலையில் பெங்களூரு பிட்சில் இலக்கை விரட்டிய அணிகள்தான் பெரும்பாலும் வென்றுள்ளன என்று புள்ளிவிவரங்கள் கூறும் நிலையில் ஏன் முதலில் பேட் செய்தார் என்ற கேள்விக்கு கோலி கூறியதாவது:

உலகக்கோப்பைக்கு முன்னதாக இந்த அணுகுமுறையைத்தான் கடைபிடிக்கப் போகிறோம், அதாவது டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் அணுகுமுறைதான் அது. அதாவது உலகக்கோப்பை வரை இந்த அணுகுமுறைதான். மனநிலை நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் போது ஆட வேண்டும், ஆகவே புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்க வேண்டியுள்ளது. நாம் விரும்பியதை சரியாகச் செயல்படுத்த முடியாத இத்தகைய போட்டிகள் இருக்கவே செய்யும்.

ஆனால் நோக்கம் சரியாக இருந்து அதன் மூலம் முன்னேற்றம் காண இடமிருக்கும் போது நாம் நல்ல நிலையில் இருப்பதாகவே பொருள். தென் ஆப்பிரிக்க அணி நன்றாக வீசினர், முதலில் அவர்களுக்கு பிட்ச் உதவியது. ஆட்டத்தின் போக்கை கணிக்க நாங்கள் தவறினோம். டி20 போட்டியில் மட்டும்தான் இலக்கை விரட்டுவது சுலபம், ஒருநாள் போட்டிகளில் பவுலர்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள வாய்ப்பும் அவகாசமும் உள்ளது. ஆனால் டி20-யில் 40-50 ரன் கூட்டணியே நம்மிடமிருந்து போட்டியை பறிக்கும் சூழல் ஏற்படும்.

200 ரன்கள் எடுத்தாலும் எதிரணி ஒருநல்ல கூட்டணி அமைத்தால் பிரச்சினைதான். விரைவில் அணியின் சேர்க்கையை சரியானதாக அமைப்போம். உள்நாட்டு கிரிக்கெட்டில் நன்றாக ஆடுபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. ஆகவே ஏதோ நீக்குப் போக்கான வீரர்கள் அணியில் ஆடுகின்றனர் என்று எண்ணத்தேவையில்லை.

மேலும் இது ஒரு இளம் அணி, இவர்கள் வெற்றியடைய கால அவகாசம் வழங்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x