Last Updated : 23 Sep, 2019 01:38 PM

 

Published : 23 Sep 2019 01:38 PM
Last Updated : 23 Sep 2019 01:38 PM

பூமராங்காக மாறிய கோலியின் முடிவு: 3-வது டி20 போட்டியில் தெ.ஆப்பிரிக்கா வெற்றி: தேடிக்கொண்ட தோல்வி

பெங்களூரு


பூமராங்காக திரும்பிய கேப்டன் கோலியின் முடிவால், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் குயின்டன் டீக்கின் சூப்பர் பேட்டிங்,இடதுகை வேகப்பந்துவீச்சாளர் ஹென்ட்ரிக்ஸின் துல்லியம் ஆகியவை வெற்றிக்கு முக்கியக் காரணமாகின. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் 1-1 என்ற கணக்கில் சமன் செய்தன.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. 135 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 19 பந்துகள் மீதமிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 140 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானம் சேஸிங் செய்வதற்கு சொர்க்கபுரியானது. இந்த மைதானத்தில் கடந்த 6 முறை நடந்த போட்டியில் எந்த அணியும் டாஸ் வென்று பேட்டிங் செய்தது இல்லை. சேஸிங் செய்துதான் வென்றுள்ளன. அப்படி இருக்கும் போது கோலி டாஸ் வென்று முதலில் ஏன் பேட்டிங் செய்தார் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

மிகப்பெரிய ஸ்கோரை நிர்ணயித்து வெற்றி பெறலாம் என்ற கோலியின் திட்டமும், பந்துவீச்சின் மூலம் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திவிடலாம் என்ற கோலியின் திட்டம் பூமராங்காக திரும்பிவிட்டது.அதுமட்டுமல்லாமல் இரவுநேரத்தில் பனிப்பொழிவு இருப்பதால் பந்துவீசுவது கடினமாக இருக்கும், கையில் பந்தைப்பிடித்து வீசுவது சிரமமானது எனத் தெரிந்திருந்தும் கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது வியப்பாகத்தான் இருக்கிறது.

ஒருவேளை பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணியை சுருட்ட முடியும் கோலி நம்பி இருந்தால் அனுபவமான பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ் குமார்அணியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் இல்லாமல் அனுபவம் குறைந்த குருணால் பாண்டியா, சைனி ஆகியோரை வைத்து என்ன செய்ய முடியும்? இருவரும் ரன்களை வாரிக்கொடுத்துவிட்டனர்.

ஒருநாள் போட்டிகளில் கையாண்டு வரும் வழக்கமான தாக்குதல் மற்றும் நிலைகுலைய வைக்கும் பந்துவீச்சு நுட்பத்தை டி20 போட்டியிலும் கோலி பயன்படுத்தி இருக்கலாம் மாறாக, புதிதாக ஏதோ செய்யப்போகிறேன் என நினைத்து கையை காயப்படுத்தியுள்ளார்.

பேட்டிங் வல்லமை அவ்வளவாக இல்லாத 3 சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் எதற்காக எடுத்தார்கள் என்றே தெரியவில்லை. இதில் குருணால் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா, வாஷி்ங்டன் சுந்தர் ஆகிய 3 பேரும் நிலைத்து விளையாடக்கூடிய பேட்ஸ்மேன்கள் அல்ல. இது தெரிந்தும் தேர்வு செய்துள்ளது ஏனோ.

முதலில் பேட்டிங் செய்ய நினைத்து ஷிகர் தவணும் நல்ல தொடக்கத்தை அளித்தார். ஆனால், ஆனால், அதன்பின் வந்த வீரர்கள் யாரும் தங்கள் நிலையை உணர்ந்து விளையாடவில்லை.

6 ஓவர்களில் ஒருவிக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் என்ற வலுவான நிலையில் இருந்த இந்திய அணி, 98 ரன்களில் 6 விக்கெட்டை இழந்தது. ஏறக்குறைய அடுத்த 44 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இந்திய அணியில் ஷிகர் தவண்(36), ரிஷப் பந்த்(19), ஹர்திக் பாண்டியா(14), ஜடேஜா(19) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.

மற்ற முக்கிய பேட்ஸ்மேன்களான ரோஹித் சர்மா(9), கோலி(9), ஸ்ரேயாஸ் அய்யர்(5), குர்னல் பாண்டியா(4) என ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினார்கள்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், பார்டியுன்,ஹென்ட்ரிக்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

140 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு இந்திய அணியின் பந்துவீச்சு பெரிய அளவுக்கு சிரமத்தையும், நெருக்கடியையும் கொடுக்கவில்லை.

முதல் விக்கெட்டுக்கு ஹென்ட்ரிக்ஸ், டிகாக் 76 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். ஹென்ரிக்ஸ் 28 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

டீக் காக் 28 ரன்கள் சேர்த்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆட முற்பட்டு கால்காப்பில் வாங்கினார். ஆனால், அதற்கு டிஆர்எஸ் முறையில் இந்திய கேப்டன் கோலி முறையிட்டார். ஆனால் பந்து இடதுபுறம் விலகி சென்றது தெரிந்தும் ரிவியு கேட்டு அதை வீணாக்கிவிட்டார் கோலி.

ஆனால், ஐபிஎல் போட்டிகளிலும், உலகக் கோ்ப்பைப் போட்டிகளிலும் நல்ல ஃபார்மில் இருந்த டிகாக் தனக்கே உரிய ஸ்டைலில் விளையாடி ரன்களைச் சேர்த்தார். 38 பந்துகளில் அரைசதம் அடித்தார். டி காக்குக்கு உறுதுணையாக பேட் செய்த பவுமா 27 ரன்களிலும், டிகாக் 52 பந்துகளில் 79 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். டி காக் கணக்கில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். 19 பந்துகள் மீத மிருக்கையில் ஒரு விக்கெட்டை இழந்து 140ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x