Published : 22 Sep 2019 12:07 PM
Last Updated : 22 Sep 2019 12:07 PM

டி20 உலக சாதனையைத் தக்கவைப்பது யார்? கோலி-ரோஹித் சர்மா இடையே கடும் போட்டி: 3-வது டி20யில் யார் சாதிப்பார்கள்?

ரோஹித் சர்மா , விராட் கோலி : கோப்புப்படம்

பெங்களூரு

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் எனும் சாதனையை விரட்டிப் பிடிக்க இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், துணைக் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இருவரும் சில ரன்கள் முன்னிலையுடனே மாறி மாறிச் செல்வதால் இந்த முறை கோலியை ரோஹித் சர்மா வென்றுவிடுவாரா அல்லது கோலி சாதனையைத் தக்கவைப்பாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெங்களூரில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி இன்று இரவு நடக்கிறது. 3 போட்டிகள் கொண்ட இந்தப் போட்டியில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

டி20 போட்டியில் அதிகமான ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் இதற்கு முன் ரோஹித் சர்மாதான் இருந்தார். 89 இன்னிங்ஸ்களில் ரோஹித் சர்மா 2,434 ரன்கள் சேர்த்திருந்து முதலிடத்தில் இருந்தார்.

ரோஹித் சர்மாவின் சாதனையைத் துரத்தி வந்து கொண்டிருந்த விராட் கோலி, மொஹாலியில் நடந்த டி20 ஆட்டத்தில் 72 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்தார். 66 இன்னிங்ஸ்களில் விராட் கோலி தற்போது 2,441 ரன்களுடன் முதலிடத்தில் இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.

கோலியின் 2,441 ரன்கள் எட்டுவதற்கு ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 8 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது.

இன்று நடக்கும் 3-வது டி20 போட்டியில் ரோஹித் சர்மா அதிகமான ஸ்கோரை செய்தால் விராட் கோலியின் சாதனையை உடைத்து முதலிடத்தைப் பிடிக்க முடியும். ஒருவேளை இந்த 8 ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிட்டால் கோலியின் சாதனையை முறியடிக்க முடியாது. இந்த 8 ரன்களுக்கு மேல் அரை சதமாக அடித்து நல்ல ஸ்கோரை ரோஹித் செய்தால் கோலிக்கு நெருக்கடி அளிக்க முடியும்.

ஒருவேளை 8 ரன்களுக்கு மேல் எடுத்து குறைவான ஸ்கோரில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தால் அடுத்த வரிசையில் களமிறங்கும், கோலி எளிதாக ரோஹித் சர்மாவின் சாதனையை உடைத்து தனது முதலிடத்தைத் தக்கவைப்பார்.

ஆதலால், இன்று டி20 போட்டியில் அதிகமான ரன்களைக் தக்கவைப்பது விராட் கோலியா, அல்லது ரோஹித் சர்மாவா என்பது போட்டியின் முடிவில் தெரிந்துவிடும்.

தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் 6,996 ரன்கள் சேர்த்துள்ளார். 7 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு தவணுக்கு இன்னும் 4 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. ஒருவேளை 7 ஆயிரம் ரன்களை எட்டினால், கோலி, சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மாவுக்குஅடுத்த இடத்தில் தவண் இடம் பெறுவார்.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x