Published : 22 Sep 2019 10:00 AM
Last Updated : 22 Sep 2019 10:00 AM

தென்னாப்பிரிக்காவுடன் டி20 கிரிக்கெட்; தொடரைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா: இன்று பெங்களூருவில் 3-வது ஆட்டம்

பெங்களூரு

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் ஆட்டம் இன்று பெங்களூருவில் நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, டெஸ்ட் தொடர்களில் விளையாடி வருகிறது. முதலாவதாக டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2-வது டி20 ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்திய அணி பேட்டிங்கில் வலுவாக உள்ளது. 2-வது ஆட்டத்தில் ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடவில்லை. எனவே இந்த ஆட்டத்தில் அவர் சிறப்பான ஸ்கோரை எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் விராட் கோலி, ஷிகர் தவண் ஆகியோர் 2-வது ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதைப் போலவே ஸ்ரேயஸ் ஐயரும் 2-வது ஆட்டத்தில் திறம்பட விளையாடினார். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் குறைந்த அளவு ரன்களில் ஆட்டமிழப்பதைத் தவிர்க்க வலுவான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

பவுலிங்கில் ஹர்திக் பாண்டியா, நவ்தீப் சைனி, தீபக் சாஹர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் தென் ஆப்பிரிக்க அணி விளையாடும். முதல் ஆட்டத்தில் கேப்டன் குயிண்டன் டி காக், டெம்பா பவுமா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடவில்லை. எனவே தென் ஆப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் கடைசி ஆட்டத்தில் அதிக ரன் குவிக்க முயற்சி செய்வார்கள். பவுலிங்கில் பெலுக்வாயோ, காகிசோ ரபாடா, அன்ரிச் நார்ட்ஜி, பிரிட்டோரியஸ் ஆகியோர் இந்திய அணி வீரர்களை மிரட்டக் காத்திருக்கின்றனர்.

அணி விவரம்:

இந்தியா: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மணீஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, கிருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், கலீல் அகமது, தீபக் சாஹர், நவ்தீப் சைனி.

தென் ஆப்பிரிக்கா: குயிண்டன் டி காக் (கேப்டன்), ராஸி வான் டெர் டசன், டெம்பா பவுமா, ஜூனியர் டலா, ஜோர்ன் ஃபோர்டுயின், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜி, அன்டில் பெலுக்யாவோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்சி, ஜார்ஜ் லின்டே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x