Published : 20 Sep 2019 05:37 PM
Last Updated : 20 Sep 2019 05:37 PM

ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 7% அதிகரிப்பு: வர்த்தக மதிப்பில் மும்பை இந்தியன்ஸ் முதலிடம்

மும்பை, தி இந்து பிசினஸ்லைன்

2019-ல் ஐபிஎல் கிரிக்கெட் டி20 லீகின் பிராண்ட் மதிப்பு 7% அதிகரித்து 6.8 பில்லியன் டாலர்களாக அதன் மதிப்பு உயர்ந்துள்ளது.

4 முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸின் வர்த்தக மதிப்பு 8.5% அதிகரித்து ரூ.809 கோடியாக அதிக வர்த்தக மதிப்புடைய அணியாகத் திகழ்கிறது.

ஒட்டுமொத்த பிராண்ட் மதிப்பு கடந்த ஆண்டு 6.3 பில்லியன் டாலர்களாக இருந்தது நடப்பு ஆண்டில் 6.8 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இதனை உலக பிராண்ட் மதிப்பாய்வு நிறுவனமான டஃப் அண்ட் பெல்ப்ஸ் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் ஐபிஎல் ஈக்கோசிஸ்டம் வேல்யு சுமார் 13.5% அதிகரித்து ரூ.47,500 கோடியாக உள்ளது.

ஆனால் தனிப்பட்ட உரிமையாளர் பயன் என்று பார்த்தால் அந்தந்த அணியின் கள ஆட்டத்திறன் பொறுத்து அதிகரிப்பதோ, குறைவதோ ஏற்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் வர்த்தக மதிப்பு தொடர்ந்து 4 வது ஆண்டாக அதிகரித்து ரூ.809 கோடியாக உள்ளது.

இரண்டாம் இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வர்த்தக மதிப்பு 13.1% அதிகரித்து வர்த்தக மதிப்பு ரூ.732 கோடியாக உள்ளது.

டஃப் அண்ட் பெல்ப்ஸ் வர்த்தக மதிப்பாய்வு நிறுவனத்தின் வருண் குப்தா கூறும்போது, “ஐபிஎல் அதன் 2வது பத்தாண்டுக்குள் நுழைந்துள்ளது. ஸ்டார்ட்-அப் ஆக இருந்த ஐபிஎல் வர்த்தகம் தற்போது நிலையான வர்த்தக வழிமுறைகளுக்குள் செட்டில் ஆகி லாபம் தரும் வர்த்தகமாக வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது பிசிசிஐயின் பேடிஎம் டைட்டில் ஸ்பான்ஸ்சர் ஒப்பந்த அளவுகோல்களின்படி பார்த்தால் 2022-ல் மீண்டும் ஸ்பான்ஷர்ஷிப் அழைப்பு விடுக்கும் போது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருக்கும் என்பதால் மேலும் அதன் லாபமும் வருவாயும் அதிகரிக்கும்” என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருவின் வர்த்தக மதிப்பு 8% குறைந்து முறையே ரூ.630 கோடி, ரூ.595 கோடியாக உள்ளது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் வர்த்தக மதிப்பு சீரான முறையில் அதிகரித்து வந்துள்ளது. கடந்த முறை பிரமாதமாக ஆடியதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ 9% அதிகரித்துள்ளது. அதாவது களத்தில் ஆடும் ஆட்டம்தான் அந்தந்த ஸ்பான்சர்கள் விளம்பரதாரர்களைத் திருப்தி படுத்தும், மேலும் நட்சத்திர வீரர்கள் மட்டுமே வர்த்தக மதிப்பை அதிகரித்து விடாது, களத்தில் ஆடும் ஆட்டம், வெற்றிகள் ஆகியவையே வர்த்தக மதிப்பைத் தீர்மானிக்கின்றன என்கிறது ஆய்வு நிறுவனமான டஃப் அண்ட் பெல்ப்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x