

புதுடெல்லி
இந்தியாவில் உள்ள ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் அளிக்கும் அழுத்தம் காரணமாகவே இலங்கை வீரர்கள் பலர் பாகிஸ்தானுக்கு வர அஞ்சுகிறார்கள் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் செல்லும் இலங்கை அணி அங்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 27-ம் தேதி முதல் விளையாட உள்ளது. ஆனால், கடந்த 2009-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு, வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலால் இலங்கை அணியில் உள்ள முக்கிய வீரர்கள் 10 பேர் பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டார்கள்.
குறிப்பாக மலிங்கா, ஏஞ்சலோ மாத்யூஸ், தினேஷ் சண்டிமால், சுரங்கா லக்மால், திமுத் கருணாரத்னே, திசாரா பெரேரா, அகிலா தனஞ்சயா டி சில்வா, குஷால் பெரேரா, நிரோஷன் டிக்வெலா ஆகியோர் செல்லவில்லை.
பாகிஸ்தானுக்கு வலு இல்லாத 2-ம் தரம் கொண்ட இலங்கை அணிதான் பயணிக்கிறது. இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுத்தமைக்கு இந்தியாவின் மறைமுக அச்சுறுத்தல் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி விமர்சித்திருந்தார்.
இப்போது இந்தியாவில் உள்ள ஐபிஎல் அணிகள் உரிமையாளர்களின் நெருக்கடியால் வீரர்கள் பயணிக்கவில்லை என்று முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் சஜ் சாதிக், அப்ரிடி கூறியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், " இலங்கை வீரர்கள் பலர் இந்தியாவில் உள்ள ஐபிஎல் அணிகளின் நெருக்கடியில் சிக்கி இருக்கிறார்கள். கடந்த ஆண்டு இலங்கை வீரர்கள் பலரிடம் பேசி, பாகிஸ்தானில் நடக்கும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்க வாருங்கள் என்றேன். அவர்களும் வருவதாகத் தெரிவித்தார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள ஐபிஎல் உரிமையாளர்கள், பாகிஸ்தானுக்குச் சென்று பிஎஸ்எல் போட்டியில் விளையாடினால் ஐபிஎல் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடுவோம், ஒப்பந்தம் தரமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாகவே, பாகிஸ்தான் வருவதற்கு இலங்கை வீரர்கள் மறுக்கிறார்கள்.
இலங்கையை எப்போதும் பாகிஸ்தான் ஆதரிக்கும். நாங்கள் இலங்கைக்கு பயணம் செய்யும் எங்கள் வீரர்கள் ஓய்வு எடுப்பது எல்லாம் ஒருபோதும் நடந்தது இல்லை. ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து பாகிஸ்தானுக்கு இலங்கை வாரியம் அனுப்பி வைக்க வேண்டும். பாகிஸ்தான் வரும் இலங்கை வீரர்கள் எப்போதும் பாகிஸ்தானின் வரலாற்றில் நினைவில் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
ஐஏஎன்எஸ்