Published : 20 Sep 2019 02:08 PM
Last Updated : 20 Sep 2019 02:08 PM

7 சீசன்களாக கோலி தலைமையில் ஐபிஎல் கோப்பை இல்லை.. அவர்தான் கேப்டனா? - ஆம் என்கிறார் சைமன் கேட்டிச்

வரும் ஐபிஎல் தொடரில் கோப்பையைத் தூக்கும் கனவுடன் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகத்தில் தீவிர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அணியின் இயக்குநராக நியூஸி.யின் மைக் ஹெஸன், தலைமைப் பயிற்சியாளராக சைமன் கேடிச் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் கோலியுடன் இணைந்து செயல்பட்டு உத்திகளை மாற்றி அமைத்து கோப்பையை வெல்ல இப்போதிலிருந்தே உத்திகளை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில் 7 சீசன்களாக விராட் கோலி ஆர்சிபி கேப்டனாக இருந்தும் அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இந்நிலையில் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு சைமன் கேடிச் அளித்த பேட்டியில் நிச்சயம் கேப்டன் விராட் கோலிதான் என்றார்.

அவர் கூறியதாவது:

நாங்கள் மூன்று பேரும் (ஹெசன், கேடிச், கோலி) இணைந்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம், விராட் கோலியுடன் பணியாற்றுவதில் தயக்கம் என்ற ரீதியில் எல்லாம் நாங்கள் யோசிக்கவேயில்லை. கடந்த காலத்தில் செய்த தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும். அவரும் அதனை புரிந்து கொண்டிருப்பார், ஆகவே வித்தியாசமாக ஆட வேண்டியதை உணர்ந்திருப்பார்.

அவருடன் இதுவரை கலந்தாலோசித்த வரையில் நாங்கள் அணியை முன்னேற்றுவது பற்றி வைத்துள்ள யோசனைகளுக்கு அவர் ஆதரவாகவே பேசினார். எங்கள் அனுபவத்திலிருந்து ஆலோசனை பெற அவர் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவே கூறினார்.

ஹெஸன், கோலி இதைப் பற்றி கடந்த 2 வாரங்களாக பேசினர். எனவே கேள்வியே இல்லை, எங்களைப் பொறுத்தவரை விராட் கோலிதான் கேப்டன் அதில் மாற்றமில்லை.

களத்தில் எந்த மாதிரியான பேட்ஸ்மென்கள் இணைந்து ஆடினால் சரியாக இருக்கும் அதே போல் பவுலிங்கிலும் எந்த இருவர் சேர்ந்து பணியாற்றினால் சரியாக இருக்கும் என்று சேர்க்கையை பற்றி விவாதித்து வருகிறோம்.

அணியில் பெரிய பெரிய வீரர்கள் உள்ளனர், ஆனால் அணியின் வெற்றிக்குப் பங்களிப்பவர்கள் யார் யார் என்ற ரீதியில் அடுத்த சில மாதங்களில் நாங்கள் சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

இவ்வாறு கூறினார் சைமன் கேட்டிச்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x