Published : 28 Jul 2015 09:49 AM
Last Updated : 28 Jul 2015 09:49 AM

பயிற்சியாளர்களுக்கு தொடரும் ரெட் கார்டு!- என்னவாகும் இந்திய ஹாக்கி அணியின் எதிர்காலம்?

இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக இருந்த நெதர்லாந்தைச் சேர்ந்த வான் அஸ், பொறுப்பேற்ற 5 மாதங்களிலேயே அதிரடியாக நீக்கப்பட்டது இந்திய ஹாக்கி வட்டாரத்தில் மட்டுமின்றி, சர்வதேச ஹாக்கி வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தால் சர்வதேச அளவில் இந்திய ஹாக்கிக்கு தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது.

சமீபத்தில் பெல்ஜியத்தின் அன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற உலக ஹாக்கி லீக் அரையிறுதி தொடரில் இந்தியா-மலேசியா இடையிலான ஆட்டத்தின்போது இந்திய வீரர்களை அழைத்து ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா பேசியதாகவும், அப்போது குறுக்கிட்ட பயிற்சியாளர் வான் அஸ், பத்ராவை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதனால் ஏற்பட்ட மோதல் காரணமாகவே தான் நீக்கப்பட்டதாக வான் அஸ் குற்றம்சாட்டியுள்ளார். பத்ரா ஒரு எதேச்சதிகாரி. அவர் தனி யாளாகவே ஹாக்கி இந்தியாவில் எல்லா முடிவுகளையும் எடுக்கிறார் எனவும் அவர் சாடியிருக்கிறார். ஆனால் பத்ராவோ, வான் அஸ்ஸுடன் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்திருந்தாலும், அது தொடர்பாக வேறு எந்த விவரத்தையும் இன்று வரை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

உலக ஹாக்கி லீக் போட்டி முடிந்தவுடனேயே நான் பயிற்சியாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டேன். நானாக விலகவில்லை. பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டேன். நான் பயிற்சியாளராக இருப்பதை பத்ரா விரும்பவில்லை என அணியின் இயக்குனர் ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் மூலம் எனக்கு சொல்லப் பட்டது என வான் அஸ் குறிப்பிட்டிருந்தார்.

சுதந்திரம் அவசியம்

வான் அஸ்ஸின் இந்த குற்றச்சாட்டை ஹாக்கி இந்தியாவோ அல்லது ஓல்ட்மான்ஸோ மறுக்கவில்லை. இதனிடையே ஹாக்கி இந்தியா சிறப்புக் குழு கூடி வான் அஸ்ஸை நீக்க பரிந்துரைத்தது. அணியின் இயக்குனராக இருந்த ஓல்ட்மான்ஸ் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஒலிம்பிக் வரை நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஹாக்கி இந்தியாவுடன் சுமூக உறவைக் கொண்டுள்ள ஓல்ட்மான்ஸ் ஒலிம்பிக் வரை நீடிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது. எனினும் அவரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதபட்சத்தில் அது இந்திய அணியின் செயல்பாட்டில் நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய ஹாக்கிக்கு நல்லதல்ல

வான் அஸ் நீக்கப்பட்டு, புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுவிட்டார் என்பது ஒருபுறம் இருந்தாலும், அடிக்கடி பயிற்சியாளரை மாற்றுவதும், பயிற்சி யாளர் விஷயத்தில் ஹாக்கி இந்தியா நிர்வாகிகள் மூக்கை நுழைப்பதும் இந்திய ஹாக்கிக்கு நல்லதல்ல என்பதுதான் முன்னாள், இந்நாள் வீரர்களின் ஒன்றுபட்ட கருத்தாக உள்ளது.

இந்தியாவில் இதுபோன்று பயிற்சியாளர்கள் நீக்கப்படுவது புதிதல்ல. அதில் தங்களுக்கு ஆச்சர்யமும் இல்லை என்கிறார்கள் இதற்கு முன்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தவர்கள். 2010-ல் உலகக் கோப்பை, ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டி ஆகியவற்றின்போது இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருந்தவரான ஸ்பெயினின் ஜோஸ் பிரேசாவோ, “மிக நல்ல பயிற்சியாளரான வான் அஸ் வெளியேற்றப்பட்டிருக்கிறார். ஹாக்கி இந்தியா மற்றும் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியவை தாங்கள் கூறுவதற்கெல்லாம் பயிற்சியாளர்கள் தலையாட்டிச் செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்” என சாடியிருக்கிறார்.

வீரர்களிடையே பாதிப்பு

திறமை வாய்ந்த பயிற்சியாளர்கள் தங்களது முடிவுகளிலோ, திட்டங்களிலோ சம்மேளன நிர்வாகிகள் தலையிடுவதை எப்போதுமே விரும்பமாட்டார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு மதிப்பளிப் பது அவசியம். பயிற்சியாளரின் செயல் பாடு குறித்து ஆராய்வதற்கு ஹாக்கி இந்தியாவுக்கு முழு அதிகாரமும், உரிமையும் இருக்கிறது. அதேநேரத்தில் பயிற்சியாளரின் முடிவுகளில் தலையிடு வதையோ அல்லது போட்டியின்போது வீரர்களை அழைத்துப் பேசுவதையோ ஏற்க முடியாது. போட்டியின்போது வீரர்களை அழைத்துப் பேசுவதற்கான அவசியம் பயிற்சியாளரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான்.

அடிக்கடி பயிற்சியாளரை மாற்றுவது அணியின் செயல்பாட்டை மட்டுமின்றி, வீரர்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒருவர் புதிய பயிற்சியாளராக வரும்போது, ஒவ்வொரு தனிப்பட்ட வீரரின் பலம், பலவீனங்களைக் கண்டறிவதற்கும், அதை சரி செய்வதற்கும் நீண்ட நாட்கள் தேவைப்படும். எனவே பயிற்சியாளரை அடிக்கடி மாற்றுவதால் பாதிப்பு அணிக்கும், வீரர்களுக்கும்தானே ஒழிய பயிற்சியாளருக்கு அல்ல என்பதை ஹாக்கி இந்தியா புரிந்துகொள்ள வேண்டிய தருணமிது.

தொடரும் நிகழ்வுகள்

பயிற்சியாளர்கள் அவமதிப்பு செய்யப்படுவதும், ஒப்பந்தம் முடிவதற்கு முன்னதாகவே வெளியேற்றப்படுவதும் இந்திய ஹாக்கியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதே நிலை தொடருமானால் தலைசிறந்த பயிற்சியாளர்கள் இந்திய அணிக்கு பயிற்சியளிக்க முன்வர மாட்டார்கள். தலைசிறந்த பயிற்சியாளரை வெளியேற்றிவிட்டோ அல்லது தலைசிறந்த பயிற்சியாளர்கள் இல்லாமலோ சர்வதேச அளவில் இந்திய அணி ஜொலிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்த நியாயமும் இல்லை.

பயிற்சியாளர்கள் விஷயத்தில் இனியாவது ஹாக்கி இந்தியா நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 4 ஆண்டுகளாவது ஒரு பயிற்சியாளருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதேநேரத்தில் ஒரு கமிட்டியை அமைத்து அதன்மூலம் சம்பந்தப்பட்ட பயிற்சியாளரின் செயல்பாடு, அணியின் செயல்பாடு ஆகியவற்றை ஆராயலாம். அவருடைய பயிற்சி சரியாக இல்லையெனில் அவரை நீக்குவதில் தவறில்லை.

அதைவிட்டுவிட்டு சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட ஒரு சிலரின் கவுரவத்துக்காக ஒருவரை நீக்குவது என்பது இந்திய ஹாக்கியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும். இனியாவது இந்த விவகாரங்களில் மத்திய விளையாட்டு அமைச்சகம் தலையிட வேண்டும். விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய விளையாட்டு ஆணையம்தான் பயிற்சியாளர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. ஊதியம் வழங்குவதோடு தங்களின் வேலை முடிந்துவிட்டதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் நினைத்துவிடக்கூடாது. பயிற்சியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். பயிற்சியாளர்கள் விஷயத்தில் சம்மேளன நிர்வாகிகளின் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வதோடு, அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். அதை செய்யாமல் இந்திய அணியிடம் பெரிய வெற்றிகளை எதிர்பார்ப்பதில்லை நியாயமில்லை.

வான் அஸ் குற்றச்சாட்டுக்கு பாஸ்கரன் மறுப்பு

இது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஹாக்கி இந்திய கமிட்டியில் இடம்பெற்றிருப்பவருமான பாஸ்கரனிடம் கேட்டபோது, “உலக ஹாக்கி லீக் போட்டியின்போது நரீந்தர் பத்ரா வீரர்களிடம் பேசவில்லை. உலக ஹாக்கி லீக்கில் சில ஆட்டங்களில் இந்திய அணியின் செயல்பாடு மோசமாக அமைந்தது. அதை மறைக்கும் வகையிலேயே வான் அஸ் இதுபோன்று பொய் சொல்கிறார். சர்வதேச ஹாக்கி சம்மேளன விதியின்படி வீரர்களின் அறைக்குகூட மற்றவர்கள் செல்ல முடியாது. அப்படி செல்லும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அணிக்கு தடை விதிக்கப்படும்.

வான் அஸ் ஆலோசனையின் பேரில்தான் சிம்லா பயிற்சி முகாமுக்கும், ஸ்பெயின் பயிற்சி முகாமுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஹாக்கி லீக் போட்டி தொடர்பான அறிக்கையை அளிக்கவில்லை. அதன்பேரில்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வான் அஸ்ஸின் பிரச்சினை எதுவாக இருந்திருந்தாலும், அவர் இந்தியாவுக்கு வந்து அறிக்கை அளித்திருக்க வேண்டும். தனக்குள்ள பிரச்சினை குறித்து விளையாட்டு ஆணையத்தில் புகார் தெரிவித்திருக்க வேண்டும்” என்றார்.

பாஸ்கரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x