

ஜிம்பாவே அணிக்கு எதிராக நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்கவுள்ள நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான தோல்வி தற்போது கடந்த காலம் என்று இந்திய அணித் தலைவர் அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார்.
"வங்கதேசத் தொடர் இப்போது எங்களுக்கு கடந்த காலமே. தற்போது ஜிம்பாப்வே தொடரில்தான் முழு கவனமும் உள்ளது. ஜிம்பாப்வே அணியை நாங்கள் எளிதாக எடைபோடவில்லை. மாறாக நாங்கள் எங்கள் அணியின் பலம் பற்றியே திட்டமிட்டு வருகிறோம். நாங்கள் இங்கு வெற்றி பெறவே வந்துள்ளோம்” என்றார்.
2013-ம் ஆண்டு ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி அனைத்துப் போட்டிகளிலும் வென்றது. ஆனால் இம்முறை, “ஜிம்பாப்வே அணி முன்னேற்றம் கண்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். எனவே ஒரு நல்ல சவாலான தொடராக இது அமையும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்களை வீழ்த்த நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம்” என்றார்.
புதிய ஒருநாள் போட்டி விதிகளில் இந்திய-ஜிம்பாப்வே அணிகள் விளையாடுகின்றன. அதாவது பேட்டிங் பவர் பிளே கிடையாது, 30 யார்டு வட்டத்துக்கு வெளியே கூடுதலாக ஒரு பீல்டரை நிறுத்திக் கொள்ளலாம், அனைத்து நோபால்களுக்கும் ஃப்ரீ ஹிட் போன்ற புதிய விதிமுறைகளின் கீழ் விளையாடப்படவுள்ளது.
இது பற்றி ரஹானே கூறும்போது, “புதிய விதிமுறைகளின் கீழ் இது முதல் போட்டி. எனவே முதல் போட்டிக்குப் பிறகே இந்த புதிய விதிமுறைகளின் கீழ் புதிய உத்திகளை திட்டமிடுவோம். இந்த புதிய விதிமுறைகள் ஆர்வமூட்டுவதாக உள்ளன. ஆனால், இந்தப் புதிய விதிமுறைகள் எப்படி செல்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
எனக்கென்று தனித்த கேப்டன்சி ஸ்டைல் வைத்துள்ளேன். தோனியிடமிருந்தும் நிறைய நுணுக்கங்கள் கற்றுக் கொண்டுள்ளேன், எனவே என் கேப்டன்சி உத்திகளை செயல்படுத்த ஆவலாக இருக்கிறேன்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு இந்தத் தொடர் ஒரு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுத்துள்ளது” என்றார் அஜிங்கிய ரஹானே.