Published : 19 Sep 2019 03:22 PM
Last Updated : 19 Sep 2019 03:22 PM

கடைசி 5 டி20 இன்னிங்ஸ்களில் 74 ரன்கள்: ரிஷப் பந்த் தன் இடத்தை இழக்கிறார்?

இந்திய அணியில் ரிஷப் பந்த் இடம் கேள்விக்குறியாகும் என்ற நிலை நீடிக்கிறது, காரணம் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 4 ரன்களில் ஆட்டமிழந்து விராட் கோலியையும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியையும் வெறுப்படையச் செய்துள்ளது.

இந்தத் தொடருக்கு முன்புதான் கோலியும் சாஸ்திரியும் ரிஷப் பந்த்திற்கு இன்னும் கொஞ்சம் சூழ்நிலையைக் கணித்து ஆடும் பழக்கம் வேண்டும் என்றனர், அவர் அதனை கற்றுக் கொள்வார் என்று நம்பிக்கை தெரிவித்தனர், ஆனால் நேற்று வெற்றிக்கு 54 ரன்கள் தேவை என்ற நிலையில் அனாவசியமாக ஆட்டமிழந்து கோலி, சாஸ்திரி ஆகியோரை வெறுப்பேற்றியுள்ளார்.

மீண்டும் மீண்டும் தவறான ஷாட் தேர்வு செய்து அவர் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை இழந்து வருகிறார். நேற்று கூட எங்கு வேண்டுமானாலும் கேட்டு அடித்திருக்க வேண்டிய பந்தை ஷார்ட் பைன் லெக்கில் ஷம்சியிடம் கொடியேற்றினார்.

கடந்த 5 டி20 இன்னிங்ச்களில் 74 ரன்கள், மொத்தமாக வெள்ளைப்பந்தில் ஆடப்படும் குறுகிய வடிவ கிரிக்கெட்டில் கடந்த 12 போட்டிகளில் 229 ரன்களை 22.90 என்ற சராசரியில் எடுத்துள்ளார். அதிக பட்ச ஸ்கோரான 48 ரன்கள் வங்கதேசத்துக்கு எதிராக உலகக்கோப்பையில் எடுக்கப்பட்டது.

ஒரு புறம் அவரை தோனியின் மாற்றாகக் கருதி அவரி மீது கடும் அழுத்தங்கள் ஏற்றப்படுவதற்கு ஒரு புறம் அணி நிர்வாகமும் காரணம், அவரை வேறு டவுனில் இறக்கி அவருக்கு இன்னும் கொஞ்சம் வாய்ப்புகளை சுமையில்லாமல் அளித்துதான் திறமையைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டுமே தவிர ‘தோனிக்கு மாற்று தோனிக்கு மாற்று’ இல்லையேல் ‘அவ்வளவுதான்’ என்று அவரை நெருக்கடிக்குள்ளாக்குவது நியாயமா என்ற கேள்வியே பெரும்பாலானோருக்கு எழுந்துள்ளது.

தோனி இல்லையென்றால் அவர் செய்த பினிஷிங் பணிக்கு ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனுபவ விரர்களைத்தான் தயார் செய்ய வேண்டுமே தவிர மீண்டும் தோனியை அழைக்கும் விதமாக பந்த்திற்கு நெருக்கடி அளிப்பது இளம் வீரரின் தன்னம்பிக்கையையும் ஆற்றலையும் அழிப்பதில்தான் போய் முடியும்.

புதிய பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர், ரிஷப் பந்த் பற்றி கூறும்போது, “அச்சமற்ற கிரிக்கெட்டுக்கும் அக்கரையற்ற கிரிக்கெட்டுக்கும் இடைவெளி உள்ளது.

20 போட்டிகளில் இந்திய அணி டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஆடுகிறது, இதில் நல்ல அணியைக் கட்டமைக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. பந்த், சஞ்சு சாம்சன் இருவரையும் சுழற்சி முறையில் பயன்படுத்தி இன்னொரு விக்கெட் கீப்பரைத் தயார் செய்வதே சிறந்தது, மீண்டும் மீண்டும் தோனி தோனி என்று கூக்குரலிடுவது பின்னோக்கிய பார்வைதான்.

ஏனெனில் கவாஸ்கர் கூறியது போல் தோனி டி20 உலகக்கோப்பையில் ஆடுகிறார் என்றால் இப்போது எல்லா போட்டிகளிலும் ஆடியாக வேண்டும், திடீரென அவரை அழைத்து ஆடவைப்பது சரியாகாது.

இந்நிலையில் ரிஷப் பந்த்தின் மீதான ‘தோனிக்கு மாற்று’ அட்டையைக் கழற்றி தூக்கி எறிந்து ரிஷப் பந்த்தின் சுய அடையாளத்துடன் அவரை சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனாக உருவாக்குவதே சிறந்ததே தவிர, மீண்டும் தோனிதான் சிறந்தவர் என்ற கருத்தை உறுதி செய்ய இவரைப் பகடைக்காயாக்குவது நல்லதல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x