Published : 19 Sep 2019 09:44 AM
Last Updated : 19 Sep 2019 09:44 AM

மொஹாலி டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா: விராட் கோலி 72 ரன்கள் விளாசல்

மொஹாலி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மொஹாலியில் உள்ள ஐ.எஸ்.பிந்த்ரா மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் குயிண்டன் டி காக் 37 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 52 ரன்களும், தெம்பா பவுமா 43 பந்துகளில், ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் எடுத்தனர்.

இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் சேர்த்தது. ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 11, வான் டெர் டசன் 1, டேவிட் மில்லர் 18 ரன்களில் நடையை கட்டினர். டுவைன் பிரிட்டோரியஸ் 10, அன்டில் பெலுக்யாவோ 8 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பவர் பிளேவில் 39 ரன்கள் மட்டுமே சேர்த்த தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்கள் முடிவில் 78 ரன்களும் சேர்த்து சற்று வலுவாகவே இருந்தது.

சீராக ரன்கள் சேர்த்து வந்த குயிண்டன் டி காக், நவ்தீப் சைனி பந்தில் விராட் கோலியின் அற்புதமான கேட்ச்சால் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 11.2 ஓவரில் 88 ஆக இருந்தது. குயிண்டன் டி காக் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தது இந்திய அணி.

இதன் பின்னர் குறைந்த வேகத்துடன் பந்துகளை வீசி ரன்குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்தினர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள். கடைசி 4 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணியால் 27 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதில் 16 ரன்களை நவ்தீப் சைனி ஆட்டத்தின் கடைசி ஓவரில் விட்டுக்கொடுத்திருந்தார். இந்திய அணி சார்பில் தீபக் சாஹர் 2 விக்கெட்களையும் நவ்தீப் சைனி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 150 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் விராட் கோலி 52 பந்துகளில், 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 72 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 16 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பிரிட்டோரியஸ், ரபாடா, ஜோர்ன் ஃபோர்டுயின் ஆகியோரது பந்துகளில் விராட் கோலி சிக்ஸர் பறக்கவிட்டிருந்தார்.

முன்னதாக ரோஹித் சர்மா 12, ஷிகர் தவண் 40, ரிஷப் பந்த் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டம் மழையால் ரத்தாகியிருந்தது. கடைசி ஆட்டம் வரும் 22-ம் தேதி பெங்களூருவில் நடைபெறுகிறது.

ரன் குவிப்பில் முதலிடம்

சர்வதேச டி 20-ல் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி (2,441) முதலிடத்துக்கு முன்னேறினார். இந்த வகை சாதனையில் ரோஹித் சர்மா (2,434), மார்ட்டின் கப்தில் (2,283), ஷோயிப் மாலிக் (2,263), பிரண்டன் மெக்கலம் (2,140) ஆகியோர் முறையே 2 முதல் 5 இடங்களில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x